‘ஆன்-லைன்’ டாக்சி சேவையை தடை செய்யக்கோரி ஆட்டோ டிரைவர்கள் நூதன போராட்டம்
‘ஆன்-லைன்’ டாக்சி சேவையை தடை செய்யக்கோரி சென்னையில் சட்டி ஏந்தி ஆட்டோ டிரைவர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை,
தமிழகத்தில் ‘ஆன்-லைன்’ டாக்சி சேவை நிறுவனங்களை தடை செய்யக்கோரியும், ஆட்டோக்களுக்கு விலையில்லா ஜி.பி.எஸ். மீட்டர் வழங்கி, தமிழக அரசே ‘ஆட்டோ ஆப்’ஐ தொடங்கிட வேண்டும் என கோரிக்கை வைத்தும் நேற்று சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே ஆட்டோ டிரைவர்கள் கையில் சட்டி ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-
பயணிகளுக்கு 100 சதவீதம் பாதுகாப்பான பயணத்தை தருவது ஆட்டோ பயணம் தான். ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்க்கை இப்பொழுது கேள்விக்குறியாக மாறி இருக்கிறது. அதற்கு காரணம் மத்திய, மாநில அரசுகள் ஆட்டோ தொழிலாளர்களுக்கு எதிரான கொள்கைகளில் ஈடுபடுவதே ஆகும். பெட்ரோல் விலை உயர்வு, உதிரி பாகங்கள் விலை உயர்வு, எப்.சி. கட்டணம் உயர்வு, இன்சுரன்ஸ் கட்டணம் உயர்வு, இதனால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் ஆட்டோ தொழிலாளர்கள் தவித்து வருகிறார்கள்.
விலையில்லா ஜி.பி.எஸ். மீட்டர்
மூலதனமே இல்லாமல், வெறும் ‘செல்போன் ஆப்’களை மட்டும் உருவாக்கிக்கொண்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் ‘ஆன்-லைன்’ மூலம் டாக்சி, மோட்டார் சைக்கிள் சேவையில் ஈடுபட்டு ஆட்டோ தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டுகிறார்கள். இவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பச்சை கொடி காட்டுகிறார்கள்.
எனவே மாநில அரசு ஆட்டோக்களுக்கான ‘செல்போன் ஆப்’களை உருவாக்க வேண்டும். இதை செயல்படுத்தினால் மீட்டர் கட்டணத்துக்கு ஆட்டோவை இயக்க தொழிலாளர்கள் தயாராக இருக்கிறார்கள். இதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த வேண்டுமானால், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த விலையில்லா ஜி.பி.எஸ். மீட்டரை அனைத்து ஆட்டோக்களுக்கும் வழங்கிட வேண்டும். எதிர்காலத்தில் ஆட்டோ தொழிலாளர்களை கையில் சட்டி ஏந்திடாத சூழ் நிலைக்கு தள்ளாமல் இருக்க தமிழக அரசு உடனடியாக எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story