கவர்ச்சிகரமான அறிவிப்புகள், தமிழக பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது - தொல்.திருமாவளவன் பேட்டி


கவர்ச்சிகரமான அறிவிப்புகள், தமிழக பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது - தொல்.திருமாவளவன் பேட்டி
x
தினத்தந்தி 15 Feb 2020 3:45 AM IST (Updated: 14 Feb 2020 11:59 PM IST)
t-max-icont-min-icon

கவர்ச்சிகரமான அறிவிப்புகளை கொண்ட தமிழக பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

கடலூர்,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் தமிழக அரசுக்கு 4½ லட்சம் கோடி கடன் உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தக் கடனை எவ்வாறு அடைப்பது, ஈடு செய்வது என்பது பற்றிய எந்த அறிவிப்பும் இல்லை.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தை முழுமையாக அரசே ஏற்று நடத்துவது என்ற அறிவிப்பை வரவேற்கிறோம். காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார். இதை தமிழக பட்ஜெட்டில் உறுதிப்படுத்தி அறிவிக்கவில்லை. அதற்கான முயற்சியை மேற்கொள்வோம், பாடுபடுவோம் என கூறியிருப்பதால் அதில் தெளிவு இல்லை.

ஏற்கனவே டெல்டா மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி., வேதாந்தா ஆகிய நிறுவனங்கள் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக கொடுக்கப்பட்ட உரிமம் ரத்துசெய்யப்பட்டுள்ளதா என்ற எந்த தகவலும் இல்லை. இந்த அறிவிப்பு வெறும் அறிவிப்பாக மட்டுமே உள்ளது. மத்திய அரசு தமிழக அரசுக்கு ஏற்கனவே வழங்க வேண்டிய ரூ.5 ஆயிரம் கோடி நிலுவை தொகையை கேட்டுப் பெறவில்லை. அது வெறும் அறிவிப்பாகவே உள்ளது.

தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்காக நிதி ஒதுக்கீடு ரூ.3 ஆயிரத்து 800 கோடியில் இருந்து ரூ.4 ஆயிரத்து 100 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது போதுமானதாக இல்லை என்றாலும் ரூ.300 கோடி கூடுதல் நிதி ஒதுக்கி இருப்பது வரவேற்கத்தக்கது.

மொத்தத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை கொண்டதாக இருக்கிறது. அவற்றை எல்லாம் நடைமுறைப்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்று கேள்வி எழுப்பும் வகையில் அமைந்துள்ளது. இது ஏமாற்றம் அளிக்கின்ற பட்ஜெட்.

ஓ.பி.எஸ். தலைமையிலான 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பான வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் முடிவுக்கு வந்துள்ளது. சபாநாயகரே இறுதி முடிவு எடுப்பார் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியிருப்பது எதிர்பார்த்ததுதான், அதிர்ச்சி ஒன்றும் இல்லை.

டெல்லி சட்டசபை தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பு காங்கிரசுக்கு எதிரான தீர்ப்பு என்பதைவிட ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிரான தீர்ப்பு. காவல்துறையை வைத்துக்கொண்டு டெல்லி அரசுக்கு சொல்லொண்ணா துயரம் கொடுத்தது, குடியுரிமை திருத்த சட்டம், பொது இடங்களில் துப்பாக்கி சூடு, மாநில அரசுக்கு நெருக்கடி போன்ற காரணங்களால் பா.ஜ.க.வுக்கு மக்கள் பாடம் புகட்டி இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story