விழுப்புரத்தில், பெட்ரோல் பங்க் மேலாளர் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது
விழுப்புரத்தில் பெட்ரோல் பங்க் மேலாளர் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் கம்பன் நகரில் உள்ள பெட்ரோல் பங்க்கில் மேலாளராக பணியாற்றி வந்த சீனிவாசன் (வயது 55) என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவுடிகள் சிலர், நாட்டு வெடிகுண்டு வீசியதோடு அவரை கத்தியால் வெட்டியும் கொலை செய்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் போலீசார் தங்களை நெருங்கி விட்டதை அறிந்த முக்கிய குற்றவாளிகளான விழுப்புரம் கிழக்கு சண்முக புரம் காலனியை சேர்ந்த அசார் (30) திருச்சி கோர்ட்டிலும், விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலை மணிமேகலை தெருவை சேர்ந்த அப்பு என்கிற கலையரசன் (25) தாம்பரம் கோர்ட்டிலும் சரணடைந்தனர்.
இவர்கள் இருவரையும் கோர்ட்டு உத்தரவின்படி காவலில் எடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், பெட்ரோல் பங்க் உரிமையாளர் பிரகாசிடம் பணம் கேட்டு தராத ஆத்திரத்தில் அவரை கொலை செய்வதற்கு பதிலாக ஆள் அடையாளம் தெரியாமல் பெட்ரோல் பங்க் மேலாளர் சீனிவாசனை அசார் மற்றும் அவரது கூட்டாளிகள் கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் போலீஸ் காவல் முடிந்து அப்புவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் இந்த கொலையில் தொடர்புடைய தாமு உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் அசாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய நிலையில் நேற்றுடன் அவருடைய போலீஸ் காவலும் முடிந்ததால் இந்த கொலையில் அசாரை கைது செய்து பின்னர் மாலையில் விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் அசார் கொடுத்த தகவலின்பேரில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய விழுப்புரம் பானாம்பட்டு பாதை ஊரல்கரைமேடு பகுதியை சேர்ந்த நில்சன் மகன் நவீன் (24), ராமன் மகன் புனல்சூரியா (20), திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி பகுதியை சேர்ந்த சிக்கந்தர்சேட் (50) ஆகிய 3 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். பின்னர் இவர்கள் 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story