சின்னசேலம், இலங்கை அகதிகள் முகாமில் சப்-கலெக்டர் திடீர் ஆய்வு
சின்னசேலத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சின்னசேலம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தெற்கு கிராம பகுதியில் ராயர்பாளையம் செல்லும் சாலை அருகே இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் 74 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு இலங்கை அகதிகள் மறுவாழ்வு இயக்குனரகம் மூலம் தமிழக அரசு உதவிகள் செய்து வருகிறது.
இந்த அகதிகள் முகாமுக்கு கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் நேற்று நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது அவர் ஒவ்வொரு வீடாக சென்று அகதிகளிடம் குறைகள் கேட்டறிந்தார். அவரிடம், கடந்த 6 ஆண்டுகளாக அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை, நீங்கள் தான் வந்திருக்கிறீர்கள் என்று கூறிவிட்டு அகதிகள் தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர் அதன் விவரம் வருமாறு:-
அகதிகள் முகாமில் பழுதடைந்துள்ள வீடுகளை சீரமைத்து தர வேண்டும். பேரூராட்சி மூலம் போதுமான அளவுக்கு தண்ணீர் வழங்க வேண்டும். கடந்த 3 மாதங்களாக துர்நாற்றம் வீசும் அரிசியை தருவதால் சாப்பாடு செய்து சாப்பிட முடியவில்லை. எனவே ரேஷனில் தரமான அரிசி வழங்க வேண்டும்.
சின்னசேலம் பகுதியில் உள்ள அரிசி ஆலைகளுக்கு இருசக்கர வாகனங்களில் வேலைக்கு செல்கிறவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் தர அதிகாரிகள் மறுக்கிறார்கள். சுய தொழில் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழில் செய்வதற்கு பெண்களுக்கு வங்கிக்கடன் பெற்றுத்தர வேண்டும். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளுக்கு சாதி சான்றிதழ் பெற்றுத் தர வேண்டும்.
இவ்வாறு அகதிகள் கூறினார்கள். அவர்களின்கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் உறுதி அளித்தார்.
இதன்பிறகு அவர் அகதிகள் முகாமுக்கான வருவாய் ஆய்வாளரை அழைத்து அவரிடம், வாரத்துக்கு 3 நாட்கள் அகதிகள் முகாமுக்கு சென்று குறைகளை கேட்டு அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது சின்ன சேலம் தாசில்தார் வளர்மதி, வருவாய் ஆய்வாளர் மணி, பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ராஜா, கிராம நிர்வாக அலுவலர்கள் செல்வகுமார், தோப்பு காரன் மற்றும் முகாம் தலைவர் மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story