அரசு, அரசு சாரா துறை அலுவலர்களுக்கான திட்ட விளக்க கூட்டம்


அரசு, அரசு சாரா துறை அலுவலர்களுக்கான திட்ட விளக்க கூட்டம்
x
தினத்தந்தி 14 Feb 2020 10:30 PM GMT (Updated: 14 Feb 2020 7:46 PM GMT)

தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் குறித்து அரசு மற்றும் அரசு சாரா துறை அலுவலர்களுக்கான திட்ட விளக்க கூட்டம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமையில் நடைபெற்றது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் செயல்படுத்துவது குறித்து அரசு மற்றும் அரசு சாரா துறை அலுவலர்களுக்கான திட்ட விளக்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

உலக வங்கி நிதி உதவியுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் தொடங்கப்பட்ட ஒரு தனித்துவம் வாய்ந்த திட்டம் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டமாகும். காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரங்களில் ஊரக தொழில் முனைவுகளை உருவாக்குதல், நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் மற்றும் வேலை வாய்ப்பினை உருவாக்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

இந்த திட்டமானது தமிழகத்தில் 26 மாவட்டங்களில் 120 வட்டாரங்களில் 3994 ஊராட்சிகளில் 2 கட்டங்களாக செயல்படுத்தப்படும். காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 5 வட்டாரங்களில் 220 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2 வட்டாரங்களில் 101 ஊராட்சிகளில் இந்த திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள், வேளாண் சார்ந்த மற்றும் வேளாண் சாரா துறைகளின் உற்பத்தியாளர்கள் இணைந்த கூட்டமைப்புகள் மற்றும் தொழில் முனைவோர்கள் ஆகியோர் இலக்கு மக்களாகிய பயனாளிகள் ஆவர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2-வது கட்டமாக காஞ்சீபுரம் மற்றும் வாலாஜாபாத் வட்டாரங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதால், இங்குள்ள அரசு மற்றும் அரசு சாரா துறை தலைவர்களுக்கு இன்றைய தினம் திட்ட விளக்க கூட்டம் நடத்தப்படுகிறது. அனைத்து துறை அலுவலர்களும் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்த தங்களின் முழு ஒத்துழைப்பையும், பயனாளிகளை தேர்வு செய்ய ஆதரவையும் வழங்கிட வேண்டும்.

மேலும், இந்த திட்டத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள செங்கல்பட்டில் உள்ள தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்ட அலுவலகத்தில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் . இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி சுந்தரமூர்த்தி, திட்ட இயக்குனர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) ஸ்ரீதர், மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story