திருச்சி மாவட்டத்தில் இறுதி பட்டியல் வெளியீடு வாக்காளர்கள் எண்ணிக்கை 22 லட்சத்து 97 ஆயிரம்


திருச்சி மாவட்டத்தில் இறுதி பட்டியல் வெளியீடு வாக்காளர்கள் எண்ணிக்கை 22 லட்சத்து 97 ஆயிரம்
x
தினத்தந்தி 15 Feb 2020 4:30 AM IST (Updated: 15 Feb 2020 1:53 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் படி வாக்காளர்கள் எண்ணிக்கை 22 லட்சத்து 97 ஆயிரம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும், இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, கடந்த ஆண்டு(2019) டிசம்பர் மாதம் 23-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து 1.1.2020-ஐ தகுதி ஏற்பு நாளாக எடுத்துக்கொள்ளப்பட்டு சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள் கடந்த மாதம் 22-ந் தேதிவரை நடைபெற்றது. அதன் பின்னர் கள விசாரணை மேற்கொள்ளப்பட்டு அனைத்து பணிகளும் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று வாக்காளர் இறுதிப்பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் கலெக்டர் எஸ்.சிவராசு வெளியிட்டார். அதை திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார்.

அதன்படி, திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர்(தனி) ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 22 லட்சத்து 97 ஆயிரத்து 106 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ள னர். அவர்களில் ஆண் வாக்காளர்கள்-11,18,900. பெண் வாக்காளர்கள்-11 லட்சத்து 77 ஆயிரத்து 997. திருநங்கைகள்-209.

9 சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்காளர்கள் இடம் பெற்ற தொகுதி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி ஆகும். அந்த தொகுதியில் மட்டும் 3 லட்சத்து 4 ஆயிரத்து 335 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். லால்குடி சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 516 என குறைவான வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர் என கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:-

2020-ம் ஆண்டின் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகளின்போது 50,992 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர். அவர்களில் 18 வயதில் இருந்து 19 வயதுக்குட்பட்டவர்கள் மட்டும் 23,661 பேர் ஆவர். இது 46.40 சதவீதம் ஆகும். மேலும் 12,289 பேர் 20 வயது முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள். இதன் சதவீதம் 24.10 ஆகும். ஆக 18-ல் இருந்து 24 வயதுக்குட்பட்டவர்கள் மொத்தம் 35,950 பேர் ஆவர். இது 70.50 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர 1,741 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இறந்தவர்கள்-564. இடம் பெயர்ந்தோர்-820. இரட்டைப்பதிவு-357.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்குமான இறுதிப்பட்டியல் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலகங்கள், அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்கள் மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இறுதிப்பட்டியலை வெளியிடப்பட்டாலும், வாக்காளர் பட்டியலில் திருத்தப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். எனவே, இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், நீக்கம், திருத்தம் மற்றும் இடமாற்றம் செய்ய விரும்புபவர்கள் அனைத்து வேலைநாட்களிலும் வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி பதிவு அலுவலர்களின் அலுவலகங்களில் உரிய படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள www.nvsp.in என்ற இணையதளத்திலும் voters helpline என்ற செயலி மூலமாகவும் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். இவ்வாறு கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்தார்.

Next Story