‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை - மதுரையில் மறியல் செய்த வியாபாரிகள் கைது


‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை - மதுரையில் மறியல் செய்த வியாபாரிகள் கைது
x
தினத்தந்தி 15 Feb 2020 4:00 AM IST (Updated: 15 Feb 2020 2:27 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட பணிகளை விரைந்து முடிக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.

மதுரை,

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் மதுரையில் பெரியார் பஸ் நிலையம் நவீன முறையில் கட்டப்பட்டு வருகிறது. மேலும் நான்கு மாசி வீதிகளில் பாதாள சாக்கடை பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளும் நடந்து வருகின்றன. இதற்காக சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளன. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள கடைகளில் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. எனவே பணிகளை விரைந்து முடிக்க கோரி, தயாரிப்பாளர்கள் மற்றும் வணிகர்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மதுரை நேதாஜி ரோடு மேலமாசி வீதி சந்திப்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் சங்க தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். வணிகர் சங்கங்களின் மாநில இணை செயலாளர் திருமுருகன், செயலாளர் செல்வவேல் பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டு ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க கோரி கோஷம் போட்டனர்.

இது குறித்து சங்க தலைவர் பழனிச்சாமி கூறும் போது, “நான்கு மாசி வீதிகளில் நடைபெறும் பணி குறித்து அதிகாரிகள் எவ்வித தகவலும் தெரிவிக்காமல், திடீரென்று குழிகளை தோண்டினார்கள். மேலும் மாசி வீதிகளில் இடதுபுறத்தில் மட்டுமே வேலைகள் நடந்து வரும் நிலையில் எதிர்புறத்திலும் இந்த பணிகள் நடைபெறுமா என்பது குறித்து கேட்டால் தெரிவிக்க மறுக்கிறார்கள். இந்த பணிகளால் சாலையின் அளவு மிகவும் குறைந்து போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படும் நிலை உள்ளது.

மேலும் அந்த பகுதியில் குடியிருப்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் வாகனங்களை நிறுத்த என்ன ஏற்பாடு செய்துள்ளார்கள் என்று தெரியவில்லை. இது தவிர பணிகள் மிகவும் மந்தகதியில் நடைபெறுவதால் வியாபாரிகள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே பணிகளை விரைந்து முடிக்க கோரி மாநகராட்சியிடம் பல முறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. மேலும் சித்திரை திருவிழா நெருங்கி வருவதால் அதற்குள் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

பின்னர் அவர்கள் திடீரென்று அந்த சாலையில் பெரிய வட்டமாக கைகோர்த்து நின்று மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். உடனே அங்கு பாதுகாப்பிற்கு இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போலீசாருக்கும், வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் மறியலில் ஈடுபட்ட 70-க்கும் மேற்பட்ட வியாபாரிகளை கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story