டிரைவர்களிடம் வசூல் வேட்டை நடத்திய போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்


டிரைவர்களிடம் வசூல் வேட்டை நடத்திய போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
x
தினத்தந்தி 15 Feb 2020 4:30 AM IST (Updated: 15 Feb 2020 2:30 AM IST)
t-max-icont-min-icon

டிரைவர்களிடம் வசூல் வேட்டை நடத்திய பெரம்பலூர் நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் டிரைவர்களை மிரட்டி வசூல் வேட்டை நடத்தி வருவதாக 3 நிமிடம் 7 வினாடிகள் ஓடக்கூடிய வீடியோ பதிவு கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. அந்த வீடியோவில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீப்பின் முன் இருக்கையில் அமர்ந்து கொண்டு, லாரியில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிச் சென்ற டிரைவர்களிடம், அதற்கான அபராத தொகையை விதிப்பதாக இழுத்தடித்து, லஞ்சமாக பணத்தை கொடுத்து விட்டு செல்லுமாறும், இல்லையென்றால் வழக்கு போடப்படும் என்று வாகன ஓட்டிகளை மிரட்டுவதும், இதனால் டிரைவர்கள் தங்களிடம் இருந்த பணத்தை அந்த இன்ஸ்பெக்டரிடம் கொடுத்து விட்டு செல்வதும் வீடியோ காட்சியில் பதிவாகியிருந்தது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் அந்த வீடியோ காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில், அதில் இருப்பவர் பெரம்பலூர் நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த விசாரணை அறிக்கையை திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணனிடம் சமர்ப்பித்தனர். இதையடுத்து பெரம்பலூர் நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி போலீஸ் டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

Next Story