மாவட்டத்தில் இறுதி பட்டியல் வெளியீடு: 11 சட்டமன்ற தொகுதிகளில் 29.68 லட்சம் வாக்காளர்கள் ஆண்களை விட பெண்கள் அதிகம்
சேலம் மாவட்டத்தில் நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், 11 சட்டமன்ற தொகுதிகளில் 29 லட்சத்து 68 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ளனர்.
சேலம்,
இந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனை சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ராமன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.
இதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் ஆண்கள் 14 லட்சத்து 83 ஆயிரத்து 369 பேரும், பெண்கள் 14 லட்சத்து 85 ஆயிரத்து 133 பேரும், இதரர் 171 பேரும் என மொத்தம் 29 லட்சத்து 68 ஆயிரத்து 673 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியலில் ஆண்களை விட 1,764 பெண்கள் அதிகமாக உள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் 23.12.2019 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலைவிட தற்போது 60 ஆயிரத்து 824 வாக்காளர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், உதவி கலெக்டர் மாறன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல் பிரிவு) தியாகராஜன், சேலம் டவுன் தாசில்தார் மாதேஷ்வரன் உள்பட அரசியல் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ராமன் கூறுகையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அந்தந்த வாக்குப்பதிவு மையங்கள், தாசில்தார் அலுவலகங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள், வருவாய் கோட்டாசியர் அலுவலகங்களில் விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். இதுதவிர, இணையதளம் மூலம் www.nvsp.in என்ற முகவரியிலும், Voter Helpline என்ற கைபேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்றார்.
Related Tags :
Next Story