மாவட்ட செய்திகள்

பள்ளியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடகம்: மாணவியின் தாய் மீது தேசதுரோக வழக்குப்பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது சித்தராமையா பேட்டி + "||" + Siddaramaiah Interview

பள்ளியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடகம்: மாணவியின் தாய் மீது தேசதுரோக வழக்குப்பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது சித்தராமையா பேட்டி

பள்ளியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடகம்:  மாணவியின் தாய் மீது தேசதுரோக வழக்குப்பதிவு செய்திருப்பது  கண்டிக்கத்தக்கது  சித்தராமையா பேட்டி
பீதரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடத்தப்பட்ட நாடகம் தொடர்பாக மாணவியின் தாய் மீது தேசதுரோக வழக்குப்பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பீதர், 

பீதர் மாவட்டத்தில் உள்ள சாகீன் என்ற தனியார் பள்ளியில் கடந்த மாதம் (ஜனவரி) நடந்த நாடகத்தில் நடித்த மாணவி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் பேசி இருந்தார்.

இதையடு்த்து, அந்த தனியார் பள்ளியின் முதல்வர் மற்றும் மாணவியின் தாய் ஆகியோர் மீது பீதர் டவுன் போலீசார் தேசதுரோக வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டு பீதர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், பீதரில் உள்ள அந்த தனியார் பள்ளிக்கு நேற்று எதிர்க்கட்சி தலைவரான சித்தராமையா சென்றார். அங்கு பள்ளி நிர்வாகிகளை அவர் சந்தித்து பேசினார்.

சித்தராமையா சந்திப்பு

அதே நேரத்தில் பீதரில் உள்ள சிறைக்கு சென்று மாணவியின் தாய் மற்றும் தனியார் பள்ளியின் முதல்வரை சித்தராமையா சந்தித்து பேசினார். அப்போது இந்த விவகாரத்தில் உங்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி இருக்கும் என்று மாணவியின் தாயிடம் சித்தராமையா கூறியதாக தெரிகிறது.

பின்னர் சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

கண்டிக்கத்தக்கது

சாகீன் பள்ளியில் நடத்தப்பட்ட நாடகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராக பேசியதாகவும் கூறி, பள்ளியின் மீதும், மாணவியின் தாய் மீதும் தேசதுரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேசுபவர்கள் மீது தேசதுரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது. ஜனநாயகத்திற்கு எதிராகவும், மக்கள் விரோத செயல்களிலும் பா.ஜனதா அரசு ஈடுபட்டு வருகிறது. பள்ளியில் நடத்தப்பட்ட நாடகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மாணவி பேசியதில் எந்த தவறும் இல்லை. இதற்காக தேசதுரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது.

பிரபாகர் பட் நடத்தி வரும் பள்ளியில் நடந்த நாடகத்தில் பாபர் மசூதி இடிப்பு பற்றி பேசப்பட்டு இருந்தது. அந்த பள்ளி மீது தேசதுரோக வழக்குப்பதிவு செய்யாதது ஏன்?. பீதர் பள்ளி மீது தேசதுரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பது குறித்து நடைபெற உள்ள சட்டசபை கூட்டத்தொடரில் காங்கிரஸ் கட்சி பிரச்சினையை எழுப்பும். அந்த பள்ளிக்கும், மாணவியின் தாய்க்கும் நியாயம் கிடைக்க காங்கிரஸ் கட்சி தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...