திட்டக்குடி அருகே பரிதாபம், வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் சாவு - 2 பேர் படுகாயம்


திட்டக்குடி அருகே பரிதாபம், வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் சாவு - 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 15 Feb 2020 4:00 AM IST (Updated: 15 Feb 2020 3:32 AM IST)
t-max-icont-min-icon

திட்டக்குடி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 2 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திட்டக்குடி, 

திட்டக்குடி அருகே உள்ள செவ்வேரி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி மகன் மாணிக்கம், விவசாயி. இவர் தனக்கு சொந்தமான வயலில் மக்காச்சோளம் சாகுபடி செய்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மக்காச்சோளம் பயிர் அறுவடை பணி நடைபெற்றது. இதையடுத்து இரவு 10 மணியளவில் அறுவடை செய்த மக்காச்சோள பயிரை மாணிக்கம் மனைவி அழகம்மாள்(வயது 60) மற்றும் விவசாய கூலி தொழிலாளர்களான அதேஊரை சேர்ந்த தங்கராசு மகன் பெரியசாமி(46), பச்சமுத்து மனைவி சுதா(35) ஆகிய 3 பேரும் சேர்ந்து மாணிக்கம் வீட்டில் உள்ள ஒரு அறையில் கொட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வீட்டின் பக்கவாட்டு சுவர் திடீரென இடிந்து பயங்கர சத்தத்துடன் அழகம்மாள் உள்பட 3 பேர் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த 3 பேரும் வலியால் அலறி துடித்தனர். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அழகம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். பெரியசாமி, சுதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின்பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே வீட்டு சுவர் இடிந்து விழுந்த இடத்தை திட்டக்குடி தாசில்தார் செந்தில்வேல் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டதோடு, அழகம்மாள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

Next Story