கர்நாடக பா.ஜனதா டுவிட்டர் கணக்கு திடீர் முடக்கம் உண்மையை தாராளமாக பேசுவதால் முடக்கப்பட்டதாக கருத்து


கர்நாடக பா.ஜனதா டுவிட்டர் கணக்கு திடீர் முடக்கம்   உண்மையை தாராளமாக பேசுவதால் முடக்கப்பட்டதாக கருத்து
x
தினத்தந்தி 14 Feb 2020 10:09 PM GMT (Updated: 14 Feb 2020 10:09 PM GMT)

கர்நாடக பா.ஜனதா டுவிட்டர் கணக்கு திடீரென்று முடக்கப்பட்டது. ஒரு நாளுக்கு பிறகு மீண்டும் அந்த டுவிட்டர் கணக்கு செயல்பட தொடங்கியது. இதுகுறித்து கர்நாடக பா.ஜனதா, உண்மையை தாராளமாக பேசுவதால் முடக்கப்பட்டதாக கருத்து தெரிவித்துள்ளது.

பெங்களூரு, 

தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இன்றைய காலத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் சமூகவலைத்தளங்கள் மூலம் கட்சிகளை வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதில் பா.ஜனதா கட்சி முதன்மை இடத்தை வகிக்கிறது என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.

கர்நாடக பா.ஜனதா கட்சிக்கு என்று தனியாக சமூகவலைத்தளங்களில் கணக்கு தொடங்கப்பட்டு உள்ளது. அதுபோல் டுவிட்டரில் bjp4karnataka என்ற பெயரில் கர்நாடக பா.ஜனதா கட்சிக்கு கணக்கு தொடங்கப்பட்டது. இதில் மத்திய அரசின் திட்டங்கள், பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா தலைவர்களின் பேச்சுகள் அடங்கிய உரையாடல்கள், வீடியோக்கள், எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதிலடி கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகிறது.

திடீர் முடக்கம்

இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி இரவு 9.55 மணிக்கு பிறகு கர்நாடக பா.ஜனதாவின் டுவிட்டர் கணக்கு செயல்படாமல் போனது. அதாவது அந்த டுவிட்டர் கணக்கு திடீரென்று முடக்கப்பட்டது. கர்நாடக பா.ஜனதாவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதை அறிந்த பா.ஜனதா நிர்வாகிகளும், தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அந்த டுவிட்டர் கணக்கை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில் பா.ஜனதாவினர் இறங்கினர். அதன் பலனாக 12-ந்தேதி அந்த டுவிட்டர் கணக்கு மீண்டும் செயல்பட தொடங்கியது.

உண்மையை தாராளமாக பேசுவதால்...

அந்த டுவிட்டர் பக்கத்தில் கர்நாடக பா.ஜனதா சார்பில் ஒரு கருத்து பதிவிடப்பட்டு இருந்தது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

அன்பான நண்பர்களே... உண்மையை தாராளமாக பேசி வருவதால், கர்நாடக பா.ஜனதாவின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. நாம் எக்காரணம் கொண்டும் உண்மையை மக்களிடம் எடுத்துக்கூறுவதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. உங்களது ஆதரவுக்கும், ஊக்கத்துக்கும் மிகப்பெரிய நன்றிகள். சத்யமேவ ஜெயதே! ஜெய்ஹிந்த்!.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Next Story