வனத்துறையை வழங்கியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு எடியூரப்பாவுடன் மந்திரி ஆனந்த்சிங் திடீர் சந்திப்பு


வனத்துறையை வழங்கியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு   எடியூரப்பாவுடன் மந்திரி ஆனந்த்சிங் திடீர் சந்திப்பு
x
தினத்தந்தி 15 Feb 2020 4:01 AM IST (Updated: 15 Feb 2020 4:01 AM IST)
t-max-icont-min-icon

மந்திரி ஆனந்த்சிங்குக்கு வனத்துறை வழங்கி இருப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதையடுத்து, முதல்-மந்திரி எடியூரப்பாவை நேற்று ஆனந்த்சிங் திடீரென்று சந்தித்து பேசினார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் கடந்த 6-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டு புதிதாக 10 மந்திரிகள் பதவி ஏற்றுக்கொண்டனர். புதிதாக பதவி ஏற்ற 10 மந்திரிகளுக்கும் கடந்த 10-ந் தேதி இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. பின்னர் மறுநாளே (11-ந் தேதி) சில மந்திரிகளுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் மாற்றப்பட்டன. அதன்படி, உணவு, பொது விநியோகம், நுகர்வோர் விவகாரத்துறை மந்திரி ஆனந்த்சிங்கிடம் இருந்து பறிக்கப்பட்டு, அதற்கு பதிலாக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையை அவருக்கு முதல்-மந்திரி எடியூரப்பா ஒதுக்கி இருந்தார்.

இந்த நிலையில், ஆனந்த்சிங்க்கு வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை ஒதுக்கப்பட்டு இருப்பதற்கு காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

ஏனெனில் மந்திரி ஆனந்த்சிங் சட்டவிரோத சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக, அவர் மீது 15 வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகள் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதனால் வனத்துறை மந்திரியாக ஆனந்த்சிங் நியமிக்கப்பட்டு இருப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

குறிப்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் உக்கரப்பா, திருடனிடம் வீட்டின் சாவியை கொடுப்பது போன்று சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டுள்ள ஆனந்த்சிங்க்கு வனம் மற்றும் சுற்றுச்சூழல் இலாகாவை முதல்-மந்திரி எடியூரப்பா ஒதுக்கி இருப்பதாக குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

எடியூரப்பாவுடன் திடீர் சந்திப்பு

அதே நேரத்தில் இந்த விவகாரத்தை சட்டசபை கூட்டத்தொடரின் போது எழுப்பவும் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் முடிவு செய்துள்ளன. இது முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, ஆனந்த்சிங்கிடம் இருந்து வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையை பறித்துவிட்டு, அவருக்கு வேறு இலாகாவை ஒதுக்க முதல்-மந்திரி எடியூரப்பா முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த பிரச்சினை விசுவரூபம் எடுத்துள்ள நிலையில் பெங்களூரு டாலர்ஸ் காலனியில் உள்ள முதல்-மந்திரி எடியூரப்பாவின் வீட்டுக்கு நேற்று காலையில் மந்திரி ஆனந்த்சிங் சென்றார். பின்னர் அவர், எடியூரப்பாவை சந்தித்து பேசினார். அப்போது தனக்கு வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை ஒதுக்கப்பட்டு இருப்பதால் எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து எடியூரப்பாவிடம் ஆனந்த்சிங் பேசியதாக தெரிகிறது.

தண்டனை அனுபவிக்க தயார்

குறிப்பாக வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையை தான் விரும்பி கேட்கவில்லை என்றும், முதலில் தனக்கு உணவு மற்றும் பொது வினியோகத்துறை தான் ஒதுக்கப்பட்டு இருந்ததாகவும், அதன்பிறகு தான் தனக்கு வனத்துறையை நீங்களே (எடியூரப்பா) ஒதுக்கியதாகவும் மந்திரி ஆனந்த்சிங் கூறியதாகவும் தெரிகிறது. இந்த சூழ்நிலையில் தன்னிடம் இருந்து வனத்துறை பறிக்கப்பட்டு வேறு துறை ஒதுக்கப்பட்டால் தன் மீது எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகள் உண்மையாகி விடும், அதனால் தனக்கு வழங்கிய துறையை மாற்ற வேண்டாம் என்று எடியூரப்பாவிடம் ஆனந்த்சிங் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.

அதே நேரத்தில் தன் மீது உள்ள வழக்குகளில் கோர்ட்டு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. சமீபத்தில் என் மீது சுரங்க முறைகேடுகள் தொடர்பாக எந்த விதமான வழக்கும் பதிவாகவில்லை. நான் மந்திரியாகி இருப்பதை பிடிக்காமல் சிலர் தன் மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை கூறுவதாகவும், என் மீதுள்ள வழக்குகளில், கோர்ட்டில் எனக்கு எதிராக தீர்ப்பு வந்ததால் தண்டனை அனுபவிக்க தயாராக இருக்கிறேன் என்றும், அதற்கு முன்பாக தனக்கு ஒதுக்கப்பட்ட இலாகாவை மாற்றும் முடிவை கைவிட வேண்டும் என்றும் எடியூரப்பாவிடம் மந்திரி ஆனந்த்சிங் கேட்டுக் கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பல்லாரி மாவட்ட பொறுப்பு...

இதுபோல, விஜயநகரை தனி மாவட்டமாக அறிவிப்பதை கிடப்பில் போட்டு இருப்பதாகவும், விஜயநகரை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும், பல்லாரி மாவட்ட பொறுப்பு மந்திரியாக துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி நியமிக்கப்பட்டு இருப்பதாகவும், அவரை மாற்றிவிட்டு தன்னை பல்லாரி மாவட்ட பொறுப்பு மந்திரியாக நியமிக்கும்படியும் எடியூரப்பாவிடம் ஆனந்த்சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையடுத்து, தற்சமயம் வனம் மற்றும் சுற்றுச்சூழல் மந்திரியாக இருக்கும்படி ஆனந்த்சிங்கிடம் எடியூரப்பா கூறி இருப்பாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. பின்னர் எடியூரப்பா வீட்டில் இருந்து மந்திரி ஆனந்த்சிங் புறப்பட்டு சென்றார். மந்திரி ஆனந்த்சிங்கிடம் இருந்து வனத்துறை பறிக்கப்பட்டு வேறு இலாகா ஒதுக்கப்படுமா? என்பது சட்டசபை கூட்டத்தொடருக்கு முன்பாக தெரியவரும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Next Story