காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு: காதலர் தினத்தில் காதல் ஜோடி தற்கொலை ஹாரங்கி அணையில் குதித்து உயிரை மாய்த்தனர்


காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு:   காதலர் தினத்தில் காதல் ஜோடி தற்கொலை   ஹாரங்கி அணையில் குதித்து உயிரை மாய்த்தனர்
x
தினத்தந்தி 14 Feb 2020 10:45 PM GMT (Updated: 14 Feb 2020 10:36 PM GMT)

காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர் தினத்தில்ஒருகாதல் ஜோடி ஹாரங்கி அணையில் குதித்து தற்கொலை செய்து கொண்டது.

குடகு, 

மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா யமகும்பா கிராமத்தைச் சேர்ந்தவர் சிந்துஸ்ரீ(வயது 19). யமகும்பா அருகே உள்ள பட்டேகாலா கிராமத்தைச் சேர்ந்தவர் சச்சின்(25). இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டதால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நட்பாக பழகி வந்த இருவரும் பின்னர் காதலிக்க தொடங்கினர். கடந்த ஒருவருடமாக இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.

இவர்களுடைய காதல் விவகாரம் இருவரது பெற்றோருக்கும் தெரியவந்தது. இருவரது பெற்றோரும் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் சிந்துஸ்ரீயின் குடும்பத்தினர் காதலை கைவிட்டு விடும்படி அவரிடம் எச்சரித்தனர். மேலும் அவர்கள் சிந்துஸ்ரீக்கு வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நிச்சயதார்த்தமும் செய்தனர்.

நாளை திருமணம்

சிந்துஸ்ரீயின் திருமணம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) உன்சூரில் உள்ள வால்மீகி திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை சிந்துஸ்ரீயின் குடும்பத்தார் தீவிரமாக செய்து வந்தனர். ஆனால் தனது காதலனை மறக்க முடியாமல் தவித்த சிந்துஸ்ரீ கதறி அழுதபடி இருந்தார். மேலும் அவர் தனது காதலன் சச்சினை தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது இருவரும் வாழ்வில்தான் ஒன்று சேரவில்லை, சாவிலாவது ஒன்று சேருவோம் என்று முடிவெடுத்தனர். இதையடுத்து வீட்டில் யாரும் கவனிக்காத வேளையில் சிந்துஸ்ரீ வீட்டிலிருந்து வெளியேறினார்.

அணை நீரில் குதித்தனர்

பின்னர் அவர் தனது காதலன் சச்சினை சந்தித்தார். அதையடுத்து இருவரும் உன்சூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் குடகு மாவட்டத்தில் உள்ள ஹாரங்கி அணைக்கு வந்தனர். காதலர் தினமான நேற்று காலையில் இருவரும் ஹாரங்கி அணைப்பகுதியை சுற்றிப்பார்த்தனர். அணைக்கு உட்பட்ட பகுதியில் சுற்றித்திரிந்த அவர்கள் சிரித்து பேசி விளையாடி மகிழ்ந்தனர்.

அதை அங்கிருந்த சிலர் பார்த்துள்ளனர். அதையடுத்து அவர்கள் 2 பேரும் நீர்த்தேக்க பகுதிக்கு சென்றுள்ளனர். பின்னர் தற்கொலை முடிவில் உறுதியாக இருந்த இருவரும் அணை தண்ணீரில் குதித்துவிட்டனர்.

உடல்கள் மீட்பு

இதைப்பார்த்த சிலர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுபற்றி குஷால்நகர் புறநகர் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி சிந்துஸ்ரீ மற்றும் சச்சினின் உடல்களை மீட்டனர்.

அதையடுத்து போலீசார் அவர்களின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் அணையில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

காதலர் தினத்தில் சோகம்

பின்னர் இதுபற்றி அவர்களின் குடும்பத்தாருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த அவர்கள் விரைந்து வந்து சிந்துஸ்ரீ மற்றும் சச்சினின் உடல்களை பார்த்து கதறி அழுதனர். பின்னர் அவர்களது உடல்களை போலீசார் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து குஷால்நகர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உலகமே காதலர் தினத்தை நேற்று உற்சாகமாக கொண்டாடிய வேளையில் ஒரு காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story