மாவட்ட செய்திகள்

நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் கவர்னர் வஜூபாய் வாலா உரையாற்றுகிறார் கர்நாடக சட்டசபை 17-ந் தேதி கூடுகிறது + "||" + Karnataka Assembly to meet on 17th

நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் கவர்னர் வஜூபாய் வாலா உரையாற்றுகிறார் கர்நாடக சட்டசபை 17-ந் தேதி கூடுகிறது

நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர்  கவர்னர் வஜூபாய் வாலா உரையாற்றுகிறார்  கர்நாடக சட்டசபை 17-ந் தேதி கூடுகிறது
பெங்களூரு விதானசவுதாவில் சபாநாயகர் விஸ்வேசுவரஹெக்டே காகேரி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
பெங்களூரு,

சட்டசபை கூட்டு கூட்டத்தொடர் குறித்து சபாநாயகர்  கூறியதாவது:-

பெங்களூரு விதானசவுதாவில் இந்த ஆண்டுக்கான கர்நாடக சட்டசபையின் கூட்டு கூட்டத்தொடர் வருகிற 17-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் என்பதால் கவர்னர் வஜூபாய் வாலா, கூட்டு கூட்டத்தில் உரையாற்ற இருக்கிறார். கவர்னர் உரைக்கு பின்பு முக்கிய தலைவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட உள்ளது. கவர்னர் உரையில் கலந்து கொள்ளும்படி எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்களுக்கு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 18-ந் தேதியில் இருந்து 20-ந் தேதி வரை கவர்னர் உரையின் மீது விவாதம் நடைபெற இருக்கிறது.

இந்த ஆண்டின் கூட்டு கூட்டத்தொடரில் உரையாற்றும்படி கவர்னர் வஜூபாய் வாலாவை சந்தித்து முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து, அடுத்த மாதம் (மார்ச்) 2-ந் தேதியில் இருந்து 31-ந் தேதி வரை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. ஒட்டு மொத்தமாக விடுமுறை நாட்களை தவிர்த்து 25 நாட்கள் இந்த கூட்டத்தொடர் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

மார்ச் 5-ந் தேதி பட்ஜெட்

மார்ச் 5-ந் தேதி காலை 11 மணிக்கு முதல்-மந்திரி எடியூரப்பா 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். அதைத்தொடர்ந்து, மார்ச் 31-ந் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் 6 மசோதாக்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது. ஏற்கனவே நிலுவையில் உள்ள ஒரு மசோதாவை நிறைவேற்றவும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்காக கண்டிப்பாக கூட்டத்தொடரில் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

கூட்டத்தொடரில் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு விவாதிப்பதன் மூலம் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து, அதன்மூலம் தீர்வுகாண முடியும். தேவையில்லாத பிரச்சினைகளை பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று எம்.எல்.ஏ.க்களையும், அரசியல் கட்சி தலைவர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

அரசியலமைப்பு குறித்து விவாதம்

இந்த கூட்டத்தொடரில் முக்கியமாக அரசியலமைப்பு குறித்து எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் முழுமையாக அறிந்து கொள்ளும் விதமாக மார்ச் 2-ந் தேதி மற்றும் 3-ந் தேதி விவாதிக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு (2019) நவம்பர் 26-ந் தேதி அரசியலமைப்பு குறித்து விவாதிக்க சிறப்பு சட்டசபை கூடுவதாக இருந்தது. ஆனால் இடைத்தேர்தல் காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கூட்டத்தொடர் நடைபெறவில்லை.

அதன் காரணமாக தான் அரசியலமைப்பு குறித்து விவாதிக்க பட்ஜெட்டுக்கு முன்பாக 2 நாட்கள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இந்த கூட்டத்தொடரை அமைதியான முறையிலும், மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

தனியார் டி.வி. சேனல்களுக்கு தடை

கூட்டத்தொடரின் போது தனியார் டி.வி. சேனல்கள் வீடியோ கேமராக்களை எடுத்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தை போன்று கர்நாடக சட்டசபை கூட்டத்தொடருக்கும் இந்த தடை அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே கடந்த கூட்டத்தொடரின் போது இந்த விதிமுறை அமல்படுத்தப்பட்டு இருந்தது. கர்நாடகத்தில் தொலைக்காட்சி சேனல்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது நோக்கம் அல்ல. இதுபோன்ற கட்டுப்பாடுகள் வேறு சில மாநிலங்களிலும் பின்பற்றப் படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.