கொள்ளையடிக்க வந்த வீட்டில் மது குடித்துவிட்டு தூங்கிய திருடன் போலீசார் தட்டி எழுப்பி கைது செய்தனர்


கொள்ளையடிக்க வந்த வீட்டில் மது குடித்துவிட்டு தூங்கிய திருடன்   போலீசார் தட்டி எழுப்பி கைது செய்தனர்
x
தினத்தந்தி 14 Feb 2020 10:53 PM GMT (Updated: 14 Feb 2020 10:53 PM GMT)

கொள்ளையடிக்க வந்த வீட்டில் மது குடித்துவிட்டு தூங்கிய திருடனை போலீசார் தட்டி எழுப்பி கைது செய்தனர்.

மும்பை, 

மும்பை மெரின் டிரைவ் பகுதியில் உள்ள கிரிகுன்ச் அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது மாடியில் வசித்து வருபவர் சித்தான்த் சாபூ. தொழில் அதிபரான இவர், சமீபத்தில் அதே தளத்தில் புதிய வீடு வாங்கி இருந்தார். அந்த வீட்டில் சில பொருட்களை வைத்திருந்தார். ஆனால் அவர் பழைய வீட்டில் தான் தங்கியிருந்தார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று அதிகாலை 6 மணியளவில் தொழில் அதிபரின் புதிய வீட்டுக்குள் விளக்கு எரிந்ததை வேலைக்காரர் ஒருவர் கவனித்தார். மேலும் வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர் தொழில் அதிபர் சித்தான்த் சாபூவிடம் கூறினார். உடனடியாக அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் மர்ம ஆசாமி ஒருவர் குறட்டைவிட்டு தூங்கிக்கொண்டு இருந்தார்.

வெளிநாட்டு மது பாட்டில்

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழில் அதிபர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் அங்கு விரைந்து வந்து மாற்று சாவி மூலம் வீட்டை திறந்து, அங்கு தூங்கிக்கொண்டு இருந்த திருட்டு ஆசாமியை தட்டி எழுப்பினர். இதையடுத்து நடந்த விசாரணையில் அவர், மும்பை சென்ட்ரல் பகுதியை சேர்ந்த சஞ்ஜீவ்(வயது19) என்பதும் கொள்ளையடிப்பதற்காக தொழில் அதிபரின் வீட்டுக்குள் புகுந்ததும் தெரியவந்தது.

சஞ்ஜீவ் சம்பவத்தன்று நள்ளிரவு தொழில் அதிபரின் வீட்டுக்குள் பால்கனி வழியாக உள்ளே நுழைந்து உள்ளார். விலை உயர்ந்த பொருட்களை அபேஸ் செய்துவிட்டு ஓடிவிடலாம் என நினைத்து உள்ளே சென்ற அவர், அங்கு இருந்த குளிர்சாதன பெட்டியை திறந்துள்ளார். அப்போது அதற்குள், விலை உயர்ந்த ‘சாம்பெயின்' என்ற வெளிநாட்டு மதுபானம் 2 பாட்டில் இருந்தது.

மதுபாட்டிலை பார்த்தவுடன் திருடனால் ஆசையை அடக்க முடியவில்லை.

திருடன் கைது

எனவே முதலில் மதுவை காலிசெய்துவிட்டு பின்னர் கொள்ளையடித்துவிட்டு செல்லலாம் என முடிவு செய்தார். பொறுமையாக, ரசித்து வெளிநாட்டு மதுவை குடித்தார். ஒரு பாட்டிலை காலி செய்த பின் 2-வது பாட்டிலையும் குடிக்க தொடங்கினார். இதில் 2-வது பாட்டில் பாதி குடித்து கொண்டு இருந்தபோதே, அவருக்கு தூக்கம் கண்ணை கட்டியது. இதையடுத்து தான் திருடன் கொள்ளையடிக்க சென்ற வீட்டில் அயர்ந்து தூங்கி போலீசில் சிக்கி உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சஞ்ஜீவை கைது செய்தனர்.

Next Story