நெல்கொள்முதல் நிலையத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி சாவு - மோட்டாரில் இருந்து மின்சாரம் கசிந்ததால் பரிதாபம்
தஞ்சை அருகே நெல் சுத்தம் செய்யும் எந்திர மோட்டாரில் இருந்து மின்சாரம் கசிந்ததில் மின்சாரம் தாக்கி விவசாயி இறந்தார்.
சாலியமங்கலம்,
தஞ்சை மாவட்டம் சடையார்கோவில் அருகே உள்ள சின்னபுலிகுடிக்காடு கீழத்தெருவை சேர்ந்தவர் தினமணி. இவருடைய மகன் அம்பிகாபதி(வயது36). விவசாயி. இவர் நேற்று முன்தினம் சடையார்கோவில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் சுத்தம் செய்யும் எந்திரத்தின் மீது ஏறி நின்று நெல்லை எந்திரத்தில் கொட்டி கொண்டு இருந்தார். அப்போது மின்சாரம் திடீரென தடை செய்யப்பட்டு மீண்டும் வந்தது. இதனால் எந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த மோட்டார் பழுதடைந்து அதில் இருந்து கசிந்த மின்சாரம் எந்திரத்தின் மீது பாய்ந்தது.
அப்போது எந்திரத்தின் மீது நின்று கொண்டிருந்த போது அம்பிகாபதியை மின்சாரம் தாக்கியது.
இதில் துடிதுடித்து கீழே விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story