மும்பை ஐகோர்ட்டு மூத்த நீதிபதி தர்மாதிகாரி திடீர் ராஜினாமா


மும்பை ஐகோர்ட்டு   மூத்த நீதிபதி தர்மாதிகாரி திடீர் ராஜினாமா
x
தினத்தந்தி 14 Feb 2020 11:15 PM GMT (Updated: 14 Feb 2020 11:15 PM GMT)

மும்பை ஐகோர்ட்டு மூத்த நீதிபதி எஸ்.சி. தர்மாதிகாரி நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மும்பை, 

மும்பை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி பிரதீப் நந்திரஜோக்கிற்கு அடுத்து 2-வது இடத்தில் இருந்து வந்த மூத்த நீதிபதி எஸ்.சி.தர்மாதிகாரி. நேற்று மேத்திவ் நெடும்புரா என்ற வக்கீல், விசாரணைக்காக மனு ஒன்றை நீதிபதி எஸ்.சி. தர்மாதிகாரி முன் தாக்கல் செய்தார்.

அப்போது, யாரும் எதிர்பாராத வகையில், நான் எனது பதவியை ராஜினாமா செய்து விட்டேன். இன்று தான் கடைசி நாள் என நீதிபதி எஸ்.சி. தர்மாதிகாரி தெரிவித்தார். இதை கேட்டு அங்கிருந்த வக்கீல்கள் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

காரணம் என்ன?

மராட்டியத்தில் இருந்து வேறு மாநிலத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் அவர் ராஜினாமா முடிவை எடுத்தது தெரியவந்தது.

இது தொடர்பாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் தனிப்பட்ட மற்றும் குடும்ப பிரச்சினைகள் காரணமாக ராஜினாமா செய்து உள்ளேன். மும்பையில் எனக்கு சில பொறுப்புகள் உள்ளன. நான் மும்பையை விட்டு வெளியேற விரும்பவில்லை. அவர்கள் என்னை மும்பை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக்க தயாராக இல்லை. ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பரபரப்பு

நீதிபதி எஸ்.சி. தர்மாதிகாரி பாரம்பரிய வக்கீல் குடும்பத்தில் பிறந்தவர். அவர் தனது சட்டப்படிப்பை பாம்பே பல்கலைக்கழகத்தில் முடித்தார். 1983-ம் ஆண்டு அவர் வக்கீல் பணியில் சேர்ந்து மும்பை ஐகோர்ட்டில் பணியாற்றினார்.

கடந்த 2003-ம் ஆண்டு அவர் மும்பை ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் பதவி உயர்வு பெற்று நீதிபதியாக பணியாற்றி வந்தார்.

நீதிபதி எஸ்.சி. தர்மாதிகாரி வருகிற 2022-ம் ஆண்டு பணி ஓய்வு பெற இருந்த நிலையில் ராஜினாமா செய்துள்ளார். ஐகோர்ட்டு மூத்த நீதிபதி ஒருவர் திடீரென ராஜினாமா முடிவை எடுத்தது மராட்டியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story