டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு: அரசு அலுவலர்கள் 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி சென்னை கோர்ட்டு உத்தரவு


டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு:   அரசு அலுவலர்கள் 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி   சென்னை கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 14 Feb 2020 11:20 PM GMT (Updated: 14 Feb 2020 11:20 PM GMT)

டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் அரசு அலுவலர்கள் 3 பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

சென்னை, 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்திய குரூப்-4, குரூப்-2ஏ, கிராம நிர்வாக அதிகாரிக்கான தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த முறைகேடுகளுக்கு பின்புலமாக இருந்த இடைத் தரகர் ஜெயக்குமார், போலீஸ்காரர் சித்தாண்டி, டி.என்.பி.எஸ்.சி. ஊழியர் ஓம்காந்தன் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

குரூப்-2ஏ தேர்வில் ரூ.9 லட்சம் கொடுத்து வெற்றி பெற்றதாக கைது செய்யப்பட்ட வேலூர் மாவட்ட வணிகவரித்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய திருவண்ணாமலையைச் சேர்ந்த வினோத்குமார், குரூப்-4 தேர்வில் தலா ரூ.7 லட்சம் கொடுத்து வெற்றி பெற்றதாக கைதான கடலூரைச் சேர்ந்த சீனிவாசன், அவரது உறவினர் ராஜசேகர் ஆகியோர் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி செல்வகுமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, வினோத்குமார் உள்பட 3 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story