சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 2 கிலோ தங்கம் பறிமுதல் 6 பேரிடம் விசாரணை
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 2 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 6 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த ராமநாதபுரத்தைச்சேர்ந்த அமீது இப்ராகிம்(வயது 21), கொழும்பில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த சையத் அன்சாரி(27), அகமது பஷீர்(34), சென்னையைச் சேர்ந்த மஸ்தான் கனி(39) ஆகிய 4 பேரையும் சந்தேகத்தின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை நடத்தினர்.
அதில் 4 பேரும் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 4 பேரிடம் இருந்தும் ரூ.59 லட்சத்து 64 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 417 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
துபாய் விமானம்
அதேபோல் துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த சேகர் குண்டாலா(59) என்பவர் வந்தார். சந்தேகத்தின்பேரில் அவர் அணிந்து இருந்த பெல்டை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், பெல்ட் கொக்கி தங்கத்தால் செய்யப்பட்டதும், அதன்மீது வெள்ளிமுலாம் பூசி கடத்தி வந்ததும் தெரிந்தது. அவரிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 240 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது சாகிப் (29) என்பவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து இருந்த ரூ.11 லட்சத்து 23 ஆயிரம் மதிப்புள்ள 267 கிராம் தங்கத்தையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
6 பேரிடம் விசாரணை
மேலும் விமான நிலைய வருகை பகுதியில் கேட்பாரற்று கிடந்த பூந்தொட்டியை சோதனை செய்தபோது அதில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 117 கிராம் தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதும் தெரிந்தது. சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் நடத்திய சோதனையில் ரூ.85 லட்சத்து 87 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 41 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இவற்றை யாருக்காக கடத்தி வந்தனர்?, இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து பிடிபட்ட 6 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story