பணி நிரந்தரம் செய்யக்கோரி தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஊர்வலம்


பணி நிரந்தரம் செய்யக்கோரி தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஊர்வலம்
x
தினத்தந்தி 15 Feb 2020 5:20 AM IST (Updated: 15 Feb 2020 5:20 AM IST)
t-max-icont-min-icon

பணி நிரந்தரம் செய்யக்கோரி தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

புதுச்சேரி,

புதுவை அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி கடந்த 10-ந்தேதி முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 5-வது நாளாள நேற்று அவர்கள் சட்டசபையை நோக்கி ஊர்வலம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.

இதற்காக அவர்கள் கம்பன் கலையரங்கம் அருகே கூடினார்கள். அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்துக்கு சங்க தலைவர் வின்சென்ட்ராஜ் தலைமை தாங்கினார்.

ஊர்வலம் அண்ணாசலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக ஆம்பூர் சாலை நோக்கி வந்தது. அப்போது அவர்களை போலீசார் அங்கேயே தடுத்து நிறுத்தினார்கள். அங்கு அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பெத்திசெமினார் பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ், புதுவை மறைமாவட்ட முன்னாள் கல்வி செயலாளர் சுவாமிநாதன், அருட்தந்தையர்கள் ஜான்போஸ்கோ, அந்தோணிசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் அவர்கள் சட்டசபை முன்பு மறியலில் ஈடுபடும் விதமாக அங்கிருந்து புறப்பட்டனர். ஆனால் அதற்கு அனுமதி மறுத்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.

Next Story