மத்திய அரசை கண்டித்து புதுச்சேரியில் நாளை காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு


மத்திய அரசை கண்டித்து புதுச்சேரியில் நாளை காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
x
தினத்தந்தி 15 Feb 2020 12:02 AM GMT (Updated: 15 Feb 2020 12:02 AM GMT)

இடஒதுக்கீட்டை பறிக்கும் மத்திய அரசை கண்டித்து புதுவையில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவை காங்கிரஸ் தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பொருளாதாரத்தில், வாழ்க்கைதரத்தில் பின்தங்கிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களின் நலனை பேணிகாத்திட கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் வகையில் அம்பேத்கர், பிரதமர் நேரு ஆகியோர் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்தி அதை முறையாக செயல்படுத்தி வந்தனர்.

அதற்கு பிறகு வந்த காங்கிரஸ் அரசும் இடஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைப்படுத்தி அவர்களின் உரிமைகளையும், சமூக நீதியையும் காத்து வந்தது. மதவாத மோடி தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்த நாள் முதல் பின்தங்கிய மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டை ரத்து செய்வதற்கும், அவர்கள் உரிமையை பறிக்கவும், நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

மதவாத பாரதீய ஜனதா அரசும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பழங்குடியின மக்களின் உரிமையை பறிக்கும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு கூறிய தீர்ப்புகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி இடஒதுக்கீடு கொள்கையை நீர்த்துப்போகும் செயலில் ஈடுபடும் பாரதீய ஜனதா அரசின் இந்த பாதக செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யாமல் மெத்தனமாக இருப்பது சமூகநீதி கொள்கைக்கு எதிரானது ஆகும். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க சமூக நீதியை நிலைநாட்ட போராடி இடஒதுக்கீடு பெற்று தந்த தன்னலமற்ற தலைவர்களின் தியாகங்களை கொச்சைப்படுத்தும் இழிவான செயலில் பாரதீய ஜனதா அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இந்திய நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்து நாட்டின் வளர்ச்சியை நிர்மூலமாக்கி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களின் உரிமைகளையும், இடஒதுக்கீட்டையும் பறிக்க துடிக்கும் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசை கண்டித்து புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி அளவில் தலைமை தபால் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் சஞ்சய்தத், முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கிறார்கள். சமுதாயத்தில் பின்தங்கிய மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க சமூக நீதியை நிலைநாட்ட நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் புதுவை மாநில காங்கிரஸ் துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர்கள், செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், அனைத்து பிரிவு தலைவர்கள், நிர்வாகிகள் தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு மக்கள் விரோத மத்திய பாரதீய ஜனதா அரசுக்கு பாடம் புகட்டுமாறு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story