காதலர் தின உற்சாக கொண்டாட்டம் ஆதரவு, எதிர்ப்பு போராட்டங்களால் பரபரப்பு


காதலர் தின உற்சாக கொண்டாட்டம் ஆதரவு, எதிர்ப்பு போராட்டங்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 15 Feb 2020 12:07 AM GMT (Updated: 15 Feb 2020 12:07 AM GMT)

புதுச்சேரியில் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இதை ஆதரித்தும் எதிர்த்தும் போராட்டங்கள் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி,

உலகெங்கிலும் காதலர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி காதலர்கள் பொது இடங்களில் கூடி தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

காதலர் தினத்தை கொண்டாட வெளிமாநிலங்களிலிருந்து காதலர்கள் பலர் வந்திருந்தனர். அதிகாலையிலேயே கடற்கரையில் வந்த அவர்கள் அன்பு பரிசுகளை பரிமாறிக்கொண்டனர். உள்ளூர் காதலர்கள் சிலரும் அங்கு வந்து காதலர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். இதனால் ரோஜா உள்ளிட்ட பூக்கள், பரிசுப் பொருட்கள் அமோகமாக விற்பனை ஆனது.

இதற்கிடையே காதலர் தினத்துக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் பாரதி பூங்கா, கடற்கரை, தாவரவியல் பூங்காக்களுக்கு வந்த காதலர்களுக்கு பெரியார் திராவிடர் கழகத்தினர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

காதலர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர். இதற்கிடையே பாரதி பூங்காவுக்கு வந்திருந்த காதல் ஜோடிகளுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் போராட்டம் நடக்க இருப்பதாக தகவல் அறிந்து அங்கு பெரியகடை போலீசார் விரைந்து வந்து காதல் ஜோடிகளை அங்கிருந்து விரட்டியடித்தனர்.

அங்கிருந்து அவர்கள் நோணாங்குப்பம் படகு குழாம், ஊசுட்டேரி உள்ளிட்ட மற்ற சுற்றுலா இடங்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

காதலர் தின கொண்டாட்டத்துக்கு இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். காதலர் தினத்துக்கு தள்ளுபடி அறிவித்த ஓட்டல்கள், கடைகள் முன்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.

இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து காதலர் தினத்துக்கு சிறப்பு சலுகை அளிக்கப்படு்ம் என பல இடங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. இந்து முன்னணியினர் கேட்டுக் கொண்டதன் பேரில் அவை அப்புறப்படுத்தப்பட்டன.

சில கடைகளில் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதமும் ஏற்பட்டது. காமராஜ் சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் காதலர் தினத்தை கொண்டாடும் விதமாக இதய வடிவில் வைக்கப்பட்டிருந்த பலூன்களை இந்து முன்னணியினர் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புஸ்சி வீதி- மிஷன் வீதி சந்திப்பில் உள்ள ஒரு ஓட்டலில் காதலர் தினத்துக்கு சலுகை அளிக்கப்படும் என சுவரொட்டி ஒட்டி இருந்தனர். சந்திப்பில் பேனரும் வைக்கப்பட்டிருந்தது. அந்த சுவரொட்டியை இந்து முன்னணியினர் கிழித்தெறிந்தனர். பேனரை ஓட்டல் நிர்வாகமே தாமாக முன்வந்து அப்புறப்படுத்தியது.

காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டதையொட்டி முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிக அளவில் போடப்பட்டிருந்தது.

Next Story