சென்னை சேத்துப்பட்டில் காதலர் தின கொண்டாட்டம் திருமணமாகி 20 ஆண்டுகளை கடந்த தம்பதிகள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்
சென்னை சேத்துப்பட்டில், காதலர் தினத்தையொட்டி திருமணமாகி 20 ஆண்டுகளை கடந்த தம்பதிகள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
சென்னை,
காதலர் தினத்தையொட்டி, சென்னை சேத்துப்பட்டு எக்கோ பூங்காவில் நேற்று மாலை இசை-நடன நிகழ்ச்சி நடந்தது. இதில் திருமணமாகி 20 ஆண்டுகளுக்கு மேல் வெற்றிகரமாக வாழ்க்கை நடத்தி வரும் தம்பதிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அவர்கள் காதல் பாடல்களுக்கு நடனமாடி மகிழ்ந்தனர். அதனைத்தொடர்ந்து ‘கேக்’ வெட்டியும், ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்தும் காதலர் தினத்தை உற்சாகமாக கொண்டாடினர்.
பின்னர் தங்களது திருமணம் மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை குறித்த அனுபவங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நாட்டுப்புற பாடல்கள், கரகாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகளும் அரங்கேறின.
இதுகுறித்து நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏகாம்பரம்-கலைச்செல்வி தம்பதியினர் கூறுகையில், “எங்களுக்கு திருமணமாகி 45 வருடங்கள் ஆகிறது. திருமண வாழ்க்கையில் விட்டுக்கொடுப்பது என்பது மிக முக்கியமாகும். தினமும் சில நிமிடங்களாவது வாழ்க்கைத்துணையுடன் மனம் விட்டு பேசினாலே பிரச்சினைகள் வராது. இப்போதுள்ள தலைமுறையினர் தங்கள் வாழ்க்கைத்துணையுடன் விட்டுக் கொடுத்தும், அனுசரணையுடன் போனால் எல்லா நாளும் காதலர் தினமாக கொண்டாடலாம்”, என்றனர்.
Related Tags :
Next Story