சாலையோர சிறு வியாபாரிகளுக்கு கடனுதவி கலெக்டர் ஷில்பா வழங்கினார்


சாலையோர சிறு வியாபாரிகளுக்கு கடனுதவி  கலெக்டர் ஷில்பா வழங்கினார்
x
தினத்தந்தி 16 Feb 2020 5:00 AM IST (Updated: 15 Feb 2020 5:44 PM IST)
t-max-icont-min-icon

சாலையோர சிறு வியாபாரிகளுக்கு கடனுதவிகளை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வழங்கினார்.

நெல்லை, 

சாலையோர சிறு வியாபாரிகளுக்கு கடனுதவிகளை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வழங்கினார்.

கடனுதவி வழங்கும் முகாம் 

நெல்லை மாவட்டத்தில் சாலையோரத்தில் ஊசி, பாசி விற்பனை செய்யும் நரிக்குறவ சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு கடன் வழங்கும் முகாம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்டரங்கத்தில் நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி கடனுதவிகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:–

சாலையோர சிறு வணிக வியாபாரிகளை கந்து வட்டி கொடுமையில் இருந்து மீட்டு எடுக்கும் பொருட்டு தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை மூலமாக கடன் வழங்கப்படுகிறது.

71 குழுக்களுக்கு... 

5 உறுப்பினர்கள் கொண்ட புதிய குழுக்களை அமைத்து, அவர்களுக்கு வங்கி மூலம் கடனுதவி முதல் முறையாக வழங்கப்படுகிறது,. இந்த ஆண்டு 71 குழுக்களுக்கு சுமார் ரூ.26 லட்சம் கடனுதவி வழங்கப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் மொத்தம் சுமார் 10 ஆயிரம் சுய உதவி குழுக்கள் உள்ளன. அதில், 2,614 குழுக்களுக்கு நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கடனை வாங்கி சிறு தொழில்கள் செய்யும் பெண்களின் வாழ்க்கை தரம் முன்னேறி வருகிறது. இந்த ஆண்டு ரூ.10 கோடிக்கு கடன் வழங்க சுய உதவிகளுக்கு கோப்புகள் அனுப்பப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், உதவி கலெக்டர்கள் மணிஷ் நாரணவரே (நெல்லை), பிரதீக் தயாள் (சேரன்மாதேவி), மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சாந்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், தாசில்தார் தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story