மண் அள்ளும் கும்பல் அட்டூழியம்
ஒட்டன்சத்திரம் அருகே சத்திரப்பட்டியில் 160 ஏக்கர் பரப்பளவில் கருங்குளம் உள்ளது. இந்த குளத்தில் தண்ணீர் நிரம்பினால் சத்திரப்பட்டி மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
சத்திரப்பட்டி, வேலூர்–அன்னப்பட்டி, தேவத்தூர், மஞ்சநாயக்கன்பட்டி, காளிப்பட்டி உள்பட 20–க்கும் மேற்பட்ட கிராமங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இதன்மூலம் பாசன வசதி பெறும். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக சத்திரப்பட்டி கருங்குளத்தில் இரவு, பகலாக மர்ம கும்பல் பொக்லைன் எந்திரம் மூலம் மண் அள்ளி லாரிகள், டிராக்டர்களில் கொண்டு செல்கின்றனர்.
இதனால் குளத்தில் பல்வேறு இடங்களில் பெரிய பள்ளங்கள் உருவாகி உள்ளன. இதன் மூலம் சத்திரப்பட்டி கருங்குளத்தில் நிலத்தடி நீர்மட்டம் மற்றும் கனிமவளம் பாதிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மண் அள்ளும் கும்பலின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
தொடர்ந்து மண் அள்ளி கொண்டிருப்பதால் விவசாயம் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது. எனவே மண் அள்ளுவதை தடுத்து, அந்த கும்பலை கூண்டோடு பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Related Tags :
Next Story