தமிழக போலீசாரை கண்டித்து தூத்துக்குடியில் தவ்ஹித்ஜமாஅத் சார்பில் ஆர்ப்பாட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு


தமிழக போலீசாரை கண்டித்து தூத்துக்குடியில் தவ்ஹித்ஜமாஅத் சார்பில் ஆர்ப்பாட்டம்  ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
x
தினத்தந்தி 16 Feb 2020 3:45 AM IST (Updated: 15 Feb 2020 7:21 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் தமிழக போலீசாரை கண்டித்து தவ்ஹித்ஜமாஅத் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் தமிழக போலீசாரை கண்டித்து தவ்ஹித்ஜமாஅத் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து முஸ்லிம் அமைப்புகள் சார்பில் நடந்த போராட்டத்தின் போது போலீசார் தடியடி நடத்தினர். இதில் பலர் காயம் அடைந்தனர். இதனை கண்டிக்கும் விதமாக தமிழ்நாடு தவ்ஹித்ஜமாஅத் சார்பில் தூத்துக்குடியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்ட தலைவர் சம்சுதீன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் செய்யது அலி கலந்து கொண்டார். அவர் தடியடி நடத்திய போலீசாரை கண்டித்து பேசினார்.

துறைரீதியான நடவடிக்கை

முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், சென்னையில் தடியடி நடத்திய போலீஸ் அதிகாரிகள் மீது தமிழக அரசு துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வருகிற சட்டமன்ற கூட்ட தொடரில் தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் தலைமையில் போலீசார் பலர் குவிக்கப்பட்டு இருந்தனர்.

கடைகள் அடைப்பு

இதற்கிடையே, சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டிக்கும் வகையில் தூத்துக்குடி பள்ளிவாசல் பகுதியில் 100–க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. அதே போல் காயல்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒருசில கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

Next Story