நெல்லையில் கழிவு நீர் கலப்பா? தாமிரபரணியில் 11 இடங்களில் தண்ணீர் மாதிரி சேகரிப்பு பசுமை தீர்ப்பாயம் உத்தரவுப்படி அதிகாரிகள் நடவடிக்கை
நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலக்கிறதா? என 11 இடங்களில் தண்ணீர் மாதிரி சேகரிக்கப்பட்டது.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலக்கிறதா? என 11 இடங்களில் தண்ணீர் மாதிரி சேகரிக்கப்பட்டது. பசுமை தீர்ப்பாயம் உத்தரவின் படி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
பசுமை தீர்ப்பாயத்தில் மனு
சென்னை பசுமை தீர்ப்பாயத்தில் நெல்லையை அடுத்த சங்கர் நகரை சேர்ந்த முத்துராமன் என்பவர் ஒரு பொது நல வழக்கு தொடர்ந்தார். அதில், “வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி ஆறு நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் உற்பத்தியாகி, தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயில் கலக்கிறது. கழிவு நீர், குப்பைகள், பிளாஸ்டிக்குகள் கலப்பதால் தாமிரபரணி ஆறு மாசுபடுகிறது. மேலும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகளும் ஆற்றில் கலக்கின்றன. நெல்லை மாநகராட்சி பகுதியில் வெளியேறும் அனைத்து கழிவுகளும் தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. குப்பைகள் அதிக அளவு கொட்டப்படுவதால் தாமிரபரணி ஆறு மாசுபடுகிறது. ஆற்றை பாதுகாக்க வேண்டும். ஆறு மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.
கலெக்டர் தலைமையில் குழு
மனுவை விசாரித்த நீதிபதி, “தாமிரபரணி ஆற்றில் மாசு கலக்கிறதா? என ஆய்வு செய்ய வேண்டும். நெல்லை மாவட்ட கலெக்டர் தலைமையில் ஒரு குழு அமைத்து தாமிரபரணி ஆற்றின் தண்ணீரை பரிசோதனை செய்து அறிக்கை தாக்க செய்ய வேண்டும்“ என்று கூறினார்.
இதையடுத்து நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் மாசு கட்டுப்பாட்டு வாரியம், பொதுப்பணித்துறை, தாமிரபரணி ஆறு வடிகால் கோட்டம், மாநகராட்சி உள்ளிட்ட துறைகளை ஒருங்கிணைந்து குழு அமைக்கப்பட்டு உள்ளது.
11 இடங்களில்...
ஒவ்வொரு துறைக்கும் 2 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். பாபநாசம், அம்பை, திருப்புடை மருதூர், கல்லிடைக்குறிச்சி, சேரன்மாதேவி, நெல்லை சந்திப்பு, மணிமூத்தீஸ்வரம், சீவலப்பேரி உள்ளிட்ட 11 இடங்களில் தாமிரபரணி ஆற்றின் தண்ணீர் மாதிரி நேற்று சேகரிக்கப்பட்டது.
மாசுகட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் பின்டோ, உதவி செயற்பொறியாளர் நக்கீரன், டாக்டர்கள் ஞானசேகரன், உதயகுமார் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் மாதிரி எடுத்த தண்ணீரை பரிசோதனைக்கு அனுப்புகிறார்கள். பரிசோதனையில் முடிவு கலெக்டர் ஷில்பாவிடம் சமர்ப்பிக்கப்படுகிறது.
Related Tags :
Next Story