கியாஸ் விலை உயர்வை கண்டித்து தக்கலையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
கியாஸ் விலை உயர்வை கண்டித்து குமரி மேற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் தக்கலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 2 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
தக்கலை,
மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.147 அதிகரித்து உள்ளது. இந்த விலை உயர்வுக்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்த நிலையில் கியாஸ் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரி மேற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் தக்கலை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி நிர்மலா ஏஞ்சல் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் அம்பிளிகலா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது கியாஸ் சிலிண்டர்களை முன் வைத்து விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராபர்ட் புரூஸ், மாவட்ட துணை செயலாளர் ஜான் இக்னேசியஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story