போலீசார் தடியடியை கண்டித்து முஸ்லிம்கள் முற்றுகை போராட்டம்– சாலை மறியல்
போலீசார் தடியடியை கண்டித்து நெல்லை, தென்காசி மாவட்டங்களில் முஸ்லிம்கள் முற்றுகை போராட்டம் மற்றும் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.
புளியங்குடி,
போலீசார் தடியடியை கண்டித்து நெல்லை, தென்காசி மாவட்டங்களில் முஸ்லிம்கள் முற்றுகை போராட்டம் மற்றும் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.
முற்றுகை போராட்டம்
சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் நேற்று மாலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதில் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், புளியங்குடி, திரிகூடபுரம், கடையநல்லூர், அச்சன்புதூர், வடகரை, வீராணம், செங்கோட்டை, பொட்டல்புதூர், தென்காசி, சாம்பவர்வடகரை, வல்லம் ஆகிய பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர்.
முற்றுகை போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஜலாலுதீன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அப்துல்பாசித், பொருளாளர் செய்யது மசூது, துணை தலைவர் அப்துல்காதர், துணை செயலாளர்கள் காஜாமைதீன், புகாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை, மேலாண்மை குழு உறுப்பினர் அப்துல்நாசர் தொடங்கி வைத்து பேசினார். இதையொட்டி புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ஜாகிர் உசேன், சங்கரன்கோவில் துணை சூப்பிரண்டு பாலசுந்தர் ஆகியோர் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ் உள்பட நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சாலைமறியல்
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பஸ்நிலையம் அருகில் உள்ள பள்ளிவாசலில் இருந்து முஸ்லிம் அமைப்பினர் ஊர்வலமாக புறப்பட்டு போலீஸ் நிலையம் வரை வந்தனர். பின்னர் அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். சேரன்மாதேவி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், வீரவநல்லூர் இன்ஸ்பெக்டர் சாம்சன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து அவர்கள் சாலைமறியலை கைவிட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல் சேரன்மாதேவி பஸ்நிலையம் அருகே முஸ்லிம் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக அரசை கண்டித்தும், போலீசாரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதில் பத்தமடை, சேரன்மாதேவியை சேர்ந்த ஜமாத் நிர்வாகிகள் உள்பட ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story