மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து மனுதாரர்களுக்கு உரிய பதில் தெரிவிக்க வேண்டும் ; கலெக்டர் அறிவுறுத்தல்


மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து மனுதாரர்களுக்கு உரிய பதில் தெரிவிக்க வேண்டும் ; கலெக்டர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 16 Feb 2020 4:00 AM IST (Updated: 15 Feb 2020 9:27 PM IST)
t-max-icont-min-icon

கூட்டத்தில் பெறப்படும் மனு மீதான நடவடிக்கைகள் குறித்து அரசு அலுவலர்கள் மனுதாரர்களுக்கு உரிய பதில் தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் கூறினார்.

வேலூர், 

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது.

வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நலத்துறை உதவி இயக்குனர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்துக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி, முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களிடம் இருந்து ஏற்கனவே பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர் கலெக்டர் சண்முகசுந்தரம் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்களின் கோரிக்கைகள், குறைகளை கேட்டறிந்து, மனுக்கள் பெற்றுக் கொண்டார். கூட்டத்தில் 116 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கலெக்டர் வழங்கி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும், தீர்வு காணப்பட்ட விபரம் குறித்தும் மனுதாரர்களுக்கு உரிய பதிலை தனித்தனியாக அனுப்பி தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு படைவீரர் கொடிநாள் நிதி அதிக வசூல் செய்த வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன், தாசில்தார் பாலாஜி உள்ளிட்ட அரசு அலுவலர்களுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கிய பாராட்டுச்சான்று மற்றும் பதக்கங்களை கலெக்டர் சண்முகசுந்தரம் வழங்கினார்.

கூட்டத்தில், முப்படை வீரர் வாரிய துணைத்தலைவர் குரூப் கேப்டன் துரைராஜ், அரசு அலுவலர்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர் பலர் கலந்துகொண்டனர்.

Next Story