கோவில் குளத்தில் மூழ்கி வாலிபர் பரிதாப சாவு


கோவில் குளத்தில் மூழ்கி வாலிபர் பரிதாப சாவு
x
தினத்தந்தி 16 Feb 2020 3:30 AM IST (Updated: 15 Feb 2020 10:58 PM IST)
t-max-icont-min-icon

நண்பர்களுடன் கோவில் குளத்தில் குளித்து கொண்டிருந்த வாலிபர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

சென்னை, 

திருவள்ளூரை அடுத்த காக்களூர் தொழுத்தெருவை தெருவை சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது மகன் சீனிவாசன்(வயது 25). கூலித்தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில் சீனிவாசன் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் காக்களூர் செண்பகவள்ளி உடனுறை காரணீஸ்வரர் கோவில் குளத்தில் குளிக்கச் சென்றார்.

நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது, சீனிவாசன் திடீரென ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கினார்.

இதையடுத்து அவர் நீரில் தத்தளித்ததை பார்த்து, சீனிவாசனின் நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் அவரை காப்பாற்ற முடியவில்லை. இதைத்தொடர்ந்து நண்பர்கள் அனைவரும் கூச்சலிட்டதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக திருவள்ளூரில் உள்ள தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

பிணமாக மீட்டனர்

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நீரில் மூழ்கி மாயமான சீனிவாசனை தீவிரமாக தேடி வந்தனர்.

இதற்கிடையே 1 மணி நேரத்துக்கும் மேலாக தேடிய அவரை பிணமாக மீட்டனர்.

இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த சீனிவாசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story