பிரபலங்கள் பெயரில் ‘பேஸ்புக்’ கணக்கு தொடங்கி பெண்களுக்கு வலை ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டிய வாலிபர் கைது
பிரபலங்கள் பெயரில் ‘பேஸ்புக்’ சமூக வலைதளத்தில் போலியாக கணக்கு தொடங்கி பெண்களுக்கு வலை விரித்த வாலிபர் ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டியபோது கைது செய்யப்பட்டார்.
சென்னை,
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபல அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பெயரில் போலியாக கணக்கு தொடங்கி, பெண்களை வலையில் சிக்க வைக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த கணக்குகளை உண்மை என நினைத்து தொடர்பு கொள்ளும் இளம்பெண்களை கவரும் வகையில் பதிவுகளை வெளியிட்டு, அவர்களின் புகைப்படங்களையும் மர்ம ஆசாமிகள் பேஸ்புக் மூலம் வாங்கிவிடுகின்றனர்.
பின்னர், அந்த புகைப்படங் களை மார்பிங் செய்து, ஆபாச படங்களாக மாற்றி, அதை சமூக வலைதளத்தில் வெளியிடப்போவதாக இளம்பெண்களை மிரட்டுகின்றனர். சிலர் பணத்திற்காகவும், சிலர் உல்லாசத்திற்காகவும் இதுபோன்ற மிரட்டலில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
வாலிபர் கைது
அதன் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இணை கமிஷனர் நாகஜோதி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ரேவதி உள்ளிட்ட போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்கள் நடத்திய விசாரணையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த விக்னேஷ் (வயது 23) என்ற வாலிபர் சிக்கினார்.
அவர் பிரபலங்கள் பெயரில் சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் தொடங்கி, இளம்பெண்களை சிக்கவைத்து மிரட்டுவதை வாடிக்கையாக கொண்டிருந்திருக்கிறார். அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை அவர் மீது 7 புகார்கள் வந்துள்ளன. மேலும், பல புகார்கள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story