ஓட்டப்பிடாரம் அருகே பயங்கரம்: மனைவி–கள்ளக்காதலன் சரமாரி வெட்டிக்கொலை - மேள கலைஞர் கைது


ஓட்டப்பிடாரம் அருகே பயங்கரம்: மனைவி–கள்ளக்காதலன் சரமாரி வெட்டிக்கொலை - மேள கலைஞர் கைது
x
தினத்தந்தி 17 Feb 2020 12:00 AM GMT (Updated: 16 Feb 2020 5:37 PM GMT)

ஓட்டப்பிடாரம் அருகே மனைவி–கள்ளக்காதலன் சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மேள கலைஞரை போலீசார் கைது செய்தனர்.

ஓட்டப்பிடாரம், 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புங்கவர்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 58). மேள கலைஞர். இவருடைய மனைவி மாரியம்மாள் (45). இவர் புங்கவர்நத்தம் பஞ்சாயத்தில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். ஒரு மகன் தவிர மற்ற 4 பேருக்கும் திருமணமாகி விட்டது. அவர்கள் அனைவரும் வெளியூரில் வசித்து வருகின்றனர்.

சண்முகம் அடிக்கடி மேளம் அடிப்பதற்காக வெளியூருக்கு சென்று வந்தார். இதனால் மாரியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார்.

மாரியம்மாளின் எதிர்வீட்டைச் சேர்ந்தவர் சித்தரைவேல் மகன் ராமமூர்த்தி (28). இவரும் பஞ்சாயத்தில் குடிநீர் பம்பு ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இதன் காரணமாக இவர்கள் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த சண்முகம் தனது மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் அவர் தொடர்ந்து கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்தார்.

இதனால் மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் ராமமூர்த்தியை கையும் களவுமாக பிடிப்பதற்கு சண்முகம் முடிவு செய்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் சண்முகம் அளவுக்கு அதிகமாக மது குடித்தது போன்று நாடகமாடினார். பின்னர் வீட்டின் முன்பகுதியில் உள்ள வராண்டாவில் படுத்து விட்டார். இதனை அறிந்த ராமமூர்த்தி நள்ளிரவு 1 மணி அளவில் மாரியம்மாள் வீட்டுக்கு சென்று உள்ளார். அவர்கள் வீட்டின் படுக்கை அறைக்கு சென்றதும், வீட்டின் முன்பு தூங்குவது போன்று நடித்துக் கொண்டிருந்த சண்முகம் எழுந்து வீட்டிற்குள் சென்றார்.

இதை பார்த்த 2 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சண்முகம் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மாரியம்மாள், ராமமூர்த்தி ஆகிய 2 பேரையும் சரமாரியாக வெட்டினார். இதில் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். அதன்பிறகும் ஆத்திரம் அடங்காத சண்முகம், ராமமூர்த்தியின் தலையை துண்டாக வெட்டி வீசினார். பின்னர் வீட்டிலேயே படுத்துக் கொண்டார். நேற்று காலை 6 மணி அளவில் சண்முகம் பசுவந்தனை போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அங்கு தனது மனைவி, கள்ளக்காதலனை கொலை செய்த விவரத்தை தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், பசுவந்தனை போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமொழி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மாரியம்மாள், ராமமூர்த்தி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓட்டப்பிடாரம் அருகே மனைவி, கள்ளக்காதலனை மேள கலைஞர் வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story