திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் முதல்–அமைச்சருக்கு நன்றி தெரிவித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்


திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம்  முதல்–அமைச்சருக்கு நன்றி தெரிவித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 17 Feb 2020 4:00 AM IST (Updated: 16 Feb 2020 8:16 PM IST)
t-max-icont-min-icon

முதல்–அமைச்சருக்கு நன்றி தெரிவித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தூத்துக்குடி, 

திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைத்த முதல்–அமைச்சருக்கு நன்றி தெரிவித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆலோசனை கூட்டம் 

ஜெயலலிதா பிறந்தநாள் விழா மற்றும் வருகிற 22–ந் தேதி தூத்துக்குடிக்கு வருகை தரும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு நிகழ்ச்சி குறித்த தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நடந்தது.

கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கடம்பூர் ராஜூ தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., சின்னப்பன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசும் போது கூறியதாவது:–

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றுதான் கருதுகிறேன். அதனை நிவர்த்தி செய்வதற்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சிறப்பான வெற்றியை பெற பணியாற்ற வேண்டும். அ.தி.மு.க.வில் தொண்டர்களாக இருந்தவர்கள்தான் படிப்படியாக முக்கிய நிர்வாகிகளாக வந்து உள்ளனர். நாம் பிரச்சினைகளை களைந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும். ஆட்சி கவிழ்ந்து விடும் என்று கூறினார்கள். ஆனால் தொடர்ந்து 10–வது பட்ஜெட்டை அ.தி.மு.க. அரசு தாக்கல் செய்து உள்ளது. 2021–ம் ஆண்டிலும் அ.தி.மு.க. ஆட்சி தொடரும்.

முதல்–அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். விமான நிலையத்தில் ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி வடக்கு, மேற்கு பகுதிக்கு உட்பட்டவர்களும், முத்தையாபுரத்தில் தூத்துக்குடி தெற்கு, கிழக்கு, கோவில்பட்டி, விளாத்திகுளம் பகுதியை சேர்ந்தவர்களும், திருச்செந்தூரில் திருச்செந்தூர், சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர்களும் வரவேற்பு அளிக்க வேண்டும். அதே போன்று பழையகாயல், முக்கானி, ஆத்தூர், தெற்கு ஆத்தூர், ஆறுமுகநேரி ஆகிய பகுதிகளிலும் வரவேற்பு அளிக்க வேண்டும். தூத்துக்குடி முதல் திருச்செந்தூர் வரை மக்கள் கடலில் செல்வது போன்ற நிலையை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தீர்மானங்கள் 

கூட்டத்தில் சாதி, மதம் பாராது நலத்திட்ட உதவிகள், கல்வி, விளையாட்டு, ஆன்மிகம் ஆகியவற்றில் அருந்தொண்டு என பண்முக சிறப்புகள் பெற்ற டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் புகழ் விளங்க மணிமண்டபம் அமைத்து தந்து, அதனை திறந்து வைக்கும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது, முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கியும், அன்னதானம், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடுவது, டெல்டா மாவட்டங்களை ஒருங்கிணைத்து பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க தனிச்சட்டம் இயற்றப்படும் என்று அறிவித்த முதல்–அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது, தூத்துக்குடிக்கு வருகிற 22–ந் தேதி வருகை தரும் முதல்–அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெற உழைப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

யார்–யார்? 

கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவரும், மாநில அமைப்பு செயலாளருமான என்.சின்னத்துரை, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ஆறுமுகநயினார், தாமோதரன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் வக்கீல் செல்வக்குமார், அரசு வக்கீல் சுகந்தன் ஆதித்தன், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் யு.எஸ்.சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story