தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையறை பணிகள் நாளை தொடங்குகிறது
வார்டுகள் மறுவரையறை பணிகள் நாளை(செவ்வாய்க்கிழமை) தொடங்கி நடைபெற உள்ளதாக,கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
தென்காசி,
தென்காசி மாவட்டத்திலுள்ள கிராமஊராட்சிகள் முதல் நகராட்சிகள் வரையிலான அமைப்புகளின் வார்டுகள் மறுவரையறை பணிகள் நாளை(செவ்வாய்க்கிழமை) தொடங்கி நடைபெற உள்ளதாக,கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
வார்டு மறுவரையறை
தமிழ்நாடுமாநில மறுவரையரை ஆணையத்தின் உத்தரவின் பேரில், தென்காசி மாவட்டத்திலுள்ள கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளை உள்ளடக்கிய அமைப்புகளின் வார்டுகள் மறுவரையறை பணிகள் நாளை(செவ்வாய்க்கிழமை) தொடங்கி, கீழ்க்கண்ட கால அட்டவணைப்படி மேற்கொள்ளப்பட உள்ளது.
நாளை(செவ்வாய்க்கிழமை) வார்டு மறுவரையறை வரைவு முன்மொழிவுகள் வெளியிடுதல் மற்றும் அதன் மீது அரசியல் கட்சிகள், பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் மறுப்புகளை அளிக்க கேட்டல், அரசியல் கட்சிகள், பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் மறுப்புகள் மீதான கருத்துக்கேட்பு கூட்டத்திற்கான அறிவிப்பு மாவட்ட மறுவரையறை அலுவலரால் வெளியிடப்படும்.
22–ந் தேதி(சனிக்கிழமை) அரசியில் கட்சிகள், பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் மறுப்புகளை சமர்ப்பிக்க கடைசி நாளாகும். 25–ந் தேதி அரசியல் கட்சிகள், பொதுமக்களின் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி மாவட்ட மறுவரையறை அலுவலர் கருத்துக்களை, மறுப்புகளை பெற்று அவற்றுக்கான தீர்வு காணப்படும்.
கருத்து கேட்பு கூட்டம்
27–ந் தேதி தமிழ்நாடு மாநில மறுவரையறை ஆணையத்தால் அரசியல் கட்சிகள், பொதுமக்களின் கருத்துக்கேட்பு கூட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்படும். மார்ச் 10–ந் தேதி மாலை 3 மணிக்கு தமிழ்நாடு மாநில மறுவரையறை ஆணையத்தால் அரசியல் கட்சிகள், பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி, அவற்றுக்கான தீர்வு காணப்படும்.
மேற்கண்டவாறு உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்பட உள்ள வார்டு மறுவரையறை பணிகளில் அரசியல் கட்சிகள், பொதுமக்கள், தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் மனுக்களாக வழங்கி தீர்வு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story