அனைத்து கனரக வாகனங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் - போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்


அனைத்து கனரக வாகனங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் - போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 17 Feb 2020 4:00 AM IST (Updated: 16 Feb 2020 10:50 PM IST)
t-max-icont-min-icon

அனைத்து கனரக வாகனங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் அறிவுறுத்திஉள்ளார்.

அரியலூர், 

அரியலூரில் மாவட்ட சாலை பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கி பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிமெண்டு ஆலைகளிலும் இயங்கும் கனரக வாகனங்கள் சாலை விதிகளை மதிக்க வேண்டும். அந்த வாகனங்களை ஓட்டும் டிரைவர்கள் சாலையில் அதிவேகமாக சென்று முன்னால் செல்லும் வாகனங்களை முந்தி செல்வதை தவிர்க்க வேண்டும். அனைத்து சாலைகளிலும் சிமெண்டு ஆலை நிறுவனங்கள் மொபைல் செக்கிங் அமைத்து கனரக வாகனங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அனைத்து கனரக வாகனங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.

கனரக வாகன டிரைவர்களுக்கு தினமும் சாலை பாதுகாப்பு குறித்து அறிவுரைகள் வழங்க வேண்டும். விபத்து ஏற்படுத்தும் கனரகவாகனங்களை சிமெண்டு ஆலைகளில் இயக்க அனுமதிக்க கூடாது என்றார். அப்போது சிமெண்டு ஆலை அலுவலர்கள் விதிகளை மீறும் கனரக வாகனங்களை இயங்க அனுமதிக்க மாட்டோம் என்று உறுதி அளித்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சர்க்கரை ஆலை அலுவலர்களிடம் கரும்பு ஏற்றி செல்லும் டிரக்டர்கள் டபுள் ட்ரேக்கர் வைத்து அதிக பாரம் ஏற்றி செல்வதை தவிர்க்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் அனைத்து சிமெண்டு தொழிற்சாலை அலுவலர்களும், சர்க்கரை ஆலை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Next Story