பொம்மாடிமலையில் நெல் கொள்முதல் நிலையம் - அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்
பொம்மாடிமலையில் நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்
அன்னவாசல்,
அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், பொம்மாடிமலை கிராமத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். ஆறுமுகம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு நெல் கொள்முதல் நிலையத்தை தொடங்கி வைத்து பேசுகையில், பொம்மாடிமலை கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இக்கிராமத்தை சுற்றியுள்ள நார்த்தாமலை, கடம்பவயல், மின்னாத்தூர், மங்கத்தேவன்பட்டி உள்ளிட்ட 14 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பயன் பெறுவார்கள்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதாரத் தொகை மற்றும் ஊக்கத் தொகை சேர்த்து ரூ.1,905-க்கும், பொதுரக நெல் ரூ.1,865-க்கும் பெறப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு இதுவரை விவசாயிகளிடமிருந்து 17,885 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 2,224 விவசாயிகளுக்கு மின்னணு பணபரிவர்த்தனை மூலம் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டு 34 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 47,794 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 9,085 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். எனவே விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் கனவு திட்டமான காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றும் வகையில், முதற்கட்ட பணிக்கு ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் விரைவில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கும் அடிக்கல் நாட்ட உள்ளார்கள் என்று கூறினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் ஜெயலட்சுமி, ஒன்றியக்குழுத்தலைவர் ராமசாமி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் குமாரவேல், வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story