கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் துப்புரவு பணிகள் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு


கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் துப்புரவு பணிகள் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு
x
தினத்தந்தி 17 Feb 2020 4:00 AM IST (Updated: 16 Feb 2020 10:50 PM IST)
t-max-icont-min-icon

கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்து வரும் துப்புரவு பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.

கரூர், 

நேற்று கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை வெங்கட்ரமணசாமி கோவிலை சுற்றியுள்ள தெருக்கள், சவரிமுத்து தெரு, காமராஜபுரம் பகுதியில் உள்ள தெருக்கள் முழுவதும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அதிகாரிகளுடன் நடந்தே சென்று துப்புரவு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அப்பகுதி மக்களிடம் கழிவுநீர் தேங்காமல் செல்லும் வகையில் தினமும் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றதா? என்பது குறித்து கேட்டறிந்தார். மேலும் துப்புரவு பணியாளர்களிடம் தரம் பிரித்து குப்பைகளை வழங்குமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

மேலும் ஆங்காங்கே குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த துப்புரவு பணியாளர்களிடம் உரையாடிய போக்குவரத்துத்துறை அமைச்சர், தெருக்களையும், கழிவுநீர் செல்லும் வாய்க்கால்களையும் சுத்தம் செய்யும் உங்களின் பணி நகரின் மக்கள் சுகாதாரமாக வாழ பெரிதும் துணை நிற்கும், எனவே, அற்பணிப்பு உணர்வுடன் உங்களின் துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் 80,000 குடியிருப்புகள் இருக்கின்றது. அனைத்து வார்டுகளும் சேர்த்து 9 துப்புரவு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலங்களில் தினந்தோறும் துப்புரவு பணி செய்வதற்காக 650 துப்புரவு பணியாளர்கள் பணியாற்றிவருகின்றனர்.கரூர் நகராட்சிக்குட்பட்ட குடியிருப்புகளுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படவேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்து வீடுகளுக்கும் மீட்டர் பொருத்தப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. இதனால், ஒரு தெருவில் உள்ள முதல் வீட்டிற்கு எவ்வளவு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகின்றதோ அதே அளவு தண்ணீர் கடைசி வீட்டிற்கும் வினியோகம் செய்யப்படும். அந்த வகையில், தாந்தோணி, இனாம்கரூர், கரூர் ஆகிய பகுதிகளில் குறைந்தது மூன்று நாட்களுக்கு ஒருமுறையும், அதிகபட்சமாக 5 நாட்களுக்கு ஒருமுறையும் சீரான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்தார்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், நகராட்சி ஆணையர் சுதா, திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், கரூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் நெடுஞ்செழியன், கரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் வி.சி.கே.ஜெயராஜ், தொலைபேசி ஆலோசனைக்குழு உறுப்பினர் சிவசாமி, கரூர் ஊராட்சி ஒன்றியத்தலைவர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story