லால்குடி ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டி 16 பேர் காயம்


லால்குடி ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டி 16 பேர் காயம்
x
தினத்தந்தி 17 Feb 2020 4:15 AM IST (Updated: 16 Feb 2020 10:50 PM IST)
t-max-icont-min-icon

லால்குடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 16 பேர் காயம் அடைந்தனர்.

லால்குடி, 

லால்குடியில் மகா மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு லால்குடி கொடிக்கால் தெருவில் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணி முதலே மாடுபிடி வீரர்களுக்கும், ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 5 வீரர்கள் உடற்தகுதி அடிப்படையில் நிராகரிக்கப்பட்டனர்.

ஜல்லிக்கட்டு தொடங்கும் முன்பு இதில் கலந்து கொண்ட மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். ஜல்லிக்கட்டை அமைச்சர்கள் டாக்டர் விஜயபாஸ்கர், வளர்மதி, தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகரன், திருச்சி புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ரெத்தினவேல், அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில செயலாளர் சிவபதி, லால்குடி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சூப்பர்நடேசன், திருச்சி மாவட்ட உணவுப்பொருள் பாதுகாப்பு நியமன அதிகாரி டாக்டர் சித்ரா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

காலை 8.30 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 3.30 மணி வரை விறுவிறுப்பாக நடந்தது. இதில் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், மதுரை, தஞ்சை, சேலம், விழுப்புரம், கோவை, திருப்பூர் உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 520 காளைகள் மற்றும் உள்ளூரை சேர்ந்த 45 கோவில் காளைகள் என்று மொத்தம் 565 காளைகள் ஜல்லிக்கட்டில் அவிழ்த்துவிடப்பட்டன.

இதில் 291 மாடுபிடி வீரர்கள் பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டனர். இதில் சீறிப்பாய்ந்து வந்த காளைகள் முட்டியதில் 16 வீரர்கள் காயம் அடைந்தனர். அதில் லால்குடி மேலகிரு‌‌ஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த தர்மராஜ் (வயது 65) தலையில் பலத்த காயம் அடைந்ததால், அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டு விழாவில் பிடிபடாத காளைகளின் உரிமையாளருக்கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரருக்கும் 2 மோட்டார் சைக்கிள்களை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வழங்கினார். மேலும் தங்கம் மற்றும் வெள்ளி காசுகள், கட்டில், பீரோ, சைக்கிள் என்று ரூ.20 லட்சம் மதிப்பில் ஏராளமான பரிசுகளும் வழங்கப்பட்டது.

இதில் சிறந்த மாடுபிடி வீரர்களாக திருமணமேடு பகுதியை சேர்ந்த சுகன் முதல் பரிசாக ரூ.50 ஆயிரம் மதிப்பிலான தேக்கு கட்டிலையும், லால்குடியை சேர்ந்த மகாமணி 2-வது பரிசாக ரூ.25 ஆயிரம் மதிப்பிலான கியாஸ் அடுப்பையும் பெற்றனர். திருச்சியை சேர்ந்த அழகேசன் மூன்றாம் பரிசையும் தட்டிச்சென்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் காத்தான் தலைமையில், ஒருங்கிணைப்பு குழுவினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை லால்குடி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மணிவண்ணன் தலைமையில் 510 போலீசார் மேற்கொண்டிருந்தனர். முன்னதாக விழாவிற்கான ஆயத்த பணிகளை லால்குடி ஆர்.டி.ஓ. ராமன், லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.

Next Story