ஆவின் பால் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம்: சேலத்தில் இருந்து சென்னைக்கு தட்டுப்பாடு இல்லாமல் பால் வினியோகம் - பொது மேலாளர் தகவல்


ஆவின் பால் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம்: சேலத்தில் இருந்து சென்னைக்கு தட்டுப்பாடு இல்லாமல் பால் வினியோகம் - பொது மேலாளர் தகவல்
x
தினத்தந்தி 17 Feb 2020 4:00 AM IST (Updated: 16 Feb 2020 11:07 PM IST)
t-max-icont-min-icon

ஆவின் பால் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் நடந்தாலும், சேலத்தில் இருந்து சென்னைக்கு தட்டுப்பாடு இல்லாமல் பால் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது என்று சேலம் ஆவின் பொது மேலாளர் விஜய்பாபு தெரிவித்துள்ளார்.

சேலம், 

தமிழகம் முழுவதும் ஆவின் நிறுவனத்துக்கு 300-க்கும் மேற்பட்ட பால் டேங்கர் லாரிகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படுகின்றன. அந்த லாரிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒப்பந்தப்புள்ளி மூலம் வாடகை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன்படி 2016-ம் ஆண்டு இறுதி செய்யப்பட்ட வாடகை ஒப்பந்தம் 2018-ம் ஆண்டு முடிவடைந்தது. இதையடுத்து வாடகையில் ஆண்டுக்கு 20 சதவீதம் உயர்த்தி தருவதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை வாடகை உயர்வு அளிக்கவில்லை.

இந்தநிலையில், சென்னையில் ஆவின் நிர்வாகத்துடன் பால் டேங்கர் லாரி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் கடந்த 14-ந் தேதி நள்ளிரவு முதல் ஆவின் பால் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

சேலத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் இருந்து தினமும் 1½ லட்சம் லிட்டர் பால் 30 டேங்கர் லாரிகள் மூலமாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் 15 டேங்கர் லாரிகள் மட்டுமே வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன. மீதமுள்ள 15 டேங்கர் லாரிகள் மூலம் ஆவின் பால் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, மாற்று ஏற்பாட்டின் மூலம் கூடுதலாக 15 தனியார் வாகனங்களிலும் பால் ஏற்றி தங்கு தடையின்றி பால் வினியோகம் செய்யப்பட்டு வருவதாகவும், இதனால் எந்த பகுதிகளிலும் பால் தட்டுப்பாடு இல்லை என்றும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சேலம் ஆவின் பொது மேலாளர் விஜய்பாபு கூறுகையில், ஆவினுக்கு சொந்தமான லாரிகள் மூலமாகவும், தனியார் வாகனங்கள் மூலமாகவும் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் பால் அனுப்பி வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர, சேலம் மாவட்டத்தில், உள்ளூர் பால் வினியோகமும் சீரான முறையில் நடந்து வருகிறது. இதனால் எங்கும் பால் தட்டுப்பாடு இல்லை. அதேசமயம் பால் தட்டுப்பாடு ஏற்படுகிறது என்ற வதந்தியை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம், என்றார்.

Next Story