பட்டிவீரன்பட்டி அருகே 2 இடங்களில் காட்டுத்தீ; மரம், செடிகள் கருகின
பட்டிவீரன்பட்டி அருகே நல்லாம்பிள்ளை மற்றும் சித்தரேவு ஆகிய 2 இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்தது. இதில் மரம், செடிகள் தீயில் எரிந்து கருகின.
பட்டிவீரன்பட்டி,
பட்டிவீரன்பட்டி அருகே திண்டுக்கல்-வத்தலக்குண்டு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நல்லாம்பிள்ளை கிராமத்தை ஒட்டிய காட்டுப்பகுதியில் நேற்று மதியம் திடீரென்று காட்டுத்தீ பற்றி எரிந்தது. இந்த காட்டுத்தீ மளமளவென எரிந்து அருகில் இருந்த இடங்களுக்கும் வேகமாக பரவியது. அப்போது சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் உள்ள காடுகளில் தீப்பற்றி எரிந்தது. இதனை பார்த்த நல்லாம்பிள்ளை கிராமத்தை சேர்ந்த மக்கள் உடனடியாக வத்தலக்குண்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். தண்ணீரை பீய்ச்சி அடித்து காட்டுப்பகுதியில் பற்றி எரிந்த தீயை அணைக்க போராடினார்கள். ஆனால் தீ கட்டுக்குள் வரவில்லை.
இதையடுத்து நல்லாம்பிள்ளை, அய்யம்பட்டி, சாலைப்புதூர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும், தீயணைப்பு படையினருடன் இணைந்து ஊருக்குள் தீ பரவாமல் தடுப்பதற்காக தண்ணீர் டிராக்டர்களை வரவழைத்து தீயை அணைத்தனர். சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காட்டுத்தீ கட்டுக்குள் வந்தது. இந்த தீவிபத்தில் அப்பகுதியில் இருந்த மரம், செடி, கொடிகள் கருகின. தீயணைப்பு படையினரும், பொதுமக்களும் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால் கிராம பகுதிகளில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் சித்தரேவு அருகே நெல்லூர்-சிங்காரக்கோட்டை சாலையில் உள்ள சின்னச்சாமி என்பவரது தோட்டம் மற்றும் அதனை ஒட்டியுள்ள இடத்திலும் காட்டுத்தீ பற்றி எரிந்தது. இதில் சின்னச்சாமி தோட்டத்தில் 2 ஏக்கரில் நடப்பட்டு இருந்த மொச்சை செடிகள் தீயில் எரிந்து நாசமானது.
Related Tags :
Next Story