மைசூரு கூட்டுறவு வங்கி தேர்தல் பரிசு பொருட்களை வாங்க முண்டியடித்த வாக்காளர்கள் சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்


மைசூரு கூட்டுறவு வங்கி தேர்தல் பரிசு பொருட்களை வாங்க முண்டியடித்த வாக்காளர்கள் சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்
x
தினத்தந்தி 17 Feb 2020 4:13 AM IST (Updated: 17 Feb 2020 4:13 AM IST)
t-max-icont-min-icon

மைசூரு கூட்டுறவு வங்கி தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் பகிரங்கமாக வழங்கப்பட்டது. அதை வாங்க வாக்காளர்கள் முண்டியடித்துக் கொண்டதை சிலர் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அது தற்போது வைரலாகி வருகிறது.

மைசூரு,

மைசூருவில் கூட்டுறவு வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கியின் நிர்வாகிகளுக்கான தேர்தல் பிப்ரவரி மாதம் 16-ந் தேதி(அதாவது நேற்று) நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந் தது. அதன்படி நேற்று மைசூருவில் உள்ள கண்காட்சி வளாகத்தில் மைசூரு கூட்டுறவு வங்கி நிர்வாகிகள் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் ஓட்டுப்போட தகுதியான வாக்காளர்கள் நேற்று காலை முதலே கண்காட்சி வளாகத்திற்கு வந்தனர்.

இந்த நிலையில் சட்டசபை, நாடாளுமன்ற தேர்தலின்போது வாக்காளர்களை கவர வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதுபோன்று கூட்டுறவு வங்கி தேர்தலிலும் வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் பணம் பரிசு பொருட்களை வழங்கினர்.

அதாவது தேர்தல் நடைபெற்ற கண்காட்சி வளாகத்திற்கு வெளியே நடுரோட்டில் நின்று கொண்டு வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு தட்டு, பல்பு, வேட்டி-சேலைகள், பாத்திரங்கள், பணம் உள்ளிட்டவைகளை பகிரங்கமாக வழங்கினர். அவற்றை வாங்க வாக்காளர்கள் முண்டியடித்தனர். இதைப்பார்த்து பொதுமக்கள் பலரும் முகம் சுழித்தனர். மேலும் சிலர் அதை தங்களது செல்போன்களில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பின்னர் இதுபற்றி அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் போலீசார் அதை கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று மைசூருவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story