கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில், குறுகிய வளைவுகளை விரிவுபடுத்தும் பணி மும்முரம்
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் குறுகிய வளைவுகளை விரிவுபடுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி சமவெளி பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். இதனால் மேட்டுப்பாளையம்-கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.
ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீலகிரியில் பலத்த மழை பெய்தது. அப்போது மேற்கண்ட சாலைகள் உள்பட முக்கிய சாலைகள் சேதம் அடைந்தன. அந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் 15 குறுகிய வளைவுகளை விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் தேவைப்படும் இடங்களில் தடுப்புச்சுவர்கள் கட்டப்படுகின்றன. முதற்கட்டமாக ஒருங்கிணைந்த கட்டமைப்பு மற்றும் சாலை மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.80 லட்சம் செலவில் கைத்தளா அருகே உள்ள 2 குறுகிய வளைவுகளை விரிவுபடுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. அங்கு நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கணேசன் மற்றும் உதவி செயற்பொறியாளர் பாலமுரளி ஆகியோர் மேற்பார்வையில் 30 மீட்டர் நீளம் மற்றும் 20 அடி உயரத்துக்கு தடுப்புச்சுவர் கட்டும் பணியும் நடக்கிறது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினர் கூறியதாவது:-
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் கோத்தகிரி முதல் குஞ்சப்பனை வரை உள்ள 15 குறுகிய வளைவுகளை விரிவுபடுத்தி, தேவையான இடங்களில் தடுப்புச்சுவர் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் எதிர்வரும் கோடை சீசனுக்கு முன்பு முடிவு பெறும். அதன்பின்னர் சாலை மீண்டும் புதுப்பிக்கப்படும். இதன் மூலம் கோடை சீசனில் போக்குவரத்து நெரிசல் இன்றி வாகனங்கள் எளிதில் சென்று வர வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story