காதலித்து குடும்பம் நடத்தி விட்டு திருமணத்துக்கு மறுப்பு தனியார் நிறுவன ஊழியருக்கு வலைவீச்சு


காதலித்து குடும்பம் நடத்தி விட்டு திருமணத்துக்கு மறுப்பு தனியார் நிறுவன ஊழியருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 17 Feb 2020 5:34 AM IST (Updated: 17 Feb 2020 5:34 AM IST)
t-max-icont-min-icon

காதலித்து குடும்பம் நடத்தி விட்டு திருமணத்துக்கு மறுத்த தனியார் நிறுவன ஊழியரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

புதுச்சேரி,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புதுவை வந்து இங்குள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்து ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அதே நிறுவனத்தில் வேலைபார்க்கும் கிருமாம்பாக்கத்தை சேர்ந்த பாலாஜி என்ற வாலிபருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதுவே நாளடைவில் இருவருக்கும் காதலாக மாறியது.

லாஸ்பேட்டையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கணவன்-மனைவி போல வசித்து வந்தனர். இ்ந்த நிலையில் பாலாஜிக்கு சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை கிடைத்தது. எனவே அவர் சென்னையில் வீடு எடுத்து தங்கி அங்கு வேலை செய்து வந்தார். வாரவிடுமுறை நாட்களில் புதுவை வந்து தனது காதலியை சந்தித்து வந்தார். அவரை அடிக்கடி சென்னைக்கும் அழைத்து சென்றார்.

இந்தநிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பாலாஜியிடம் வற்புறுத்தினார். ஆனால் அவர் தனது பெற்றோர் பார்க்கும் பெண்ணை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாலாஜி அந்த பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். தற்போது பாலாஜி சென்னையில் இருப்பது தெரியவந்தது. எனவே அவரை கைது செய்ய போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.

Next Story