தோவாளையில் நள்ளிரவில் தீ விபத்து 2 ஓட்டல்கள் எரிந்து நாசம் - போலீசார் விசாரணை
தோவாளையில் நள்ளிரவு 2 ஓட்டல், கடை தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆரல்வாய்மொழி,
தோவாளை மெயின் ரோட்டையொட்டி மாணிக்கம், மகேஷ் ஆகியோர் தனித்தனியாக ஓட்டல்கள் நடத்தி வருகிறார்கள். அதன் அருகே அய்யப்பன் என்பவரின் பெட்டி கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்த பின்பு அவர்கள் ஓட்டல்கள் மற்றும் கடையை பூட்டிவிட்டு சென்றனர். நள்ளிரவில் ஒரு ஓட்டலில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. அந்த தீ அடுத்தடுத்து இருந்த ஓட்டல், கடைக்கு பரவியது. இதில் அவை தீப்பிடித்து எரிந்தன.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தின் போது ஓட்டல்களில் இருந்த கியாஸ் சிலிண்டர்களை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக அப்புறப்படுத்தினர். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
ஆனாலும், 2 ஓட்டல்களும், கடையும் முற்றிலும் எரிந்து நாசமாயின. இதில் சுமார் ரூ.3 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story