குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு


குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 18 Feb 2020 4:00 AM IST (Updated: 17 Feb 2020 8:54 PM IST)
t-max-icont-min-icon

மாதனூர் ஒன்றியத்தில் இணைக்கப்பட்ட மேல்குப்பம் ஊராட்சியை, மீண்டும் ஆலங்காயம் ஒன்றியத்தில் சேர்க்க வலியுறுத்தி கிராம பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, மனுகொடுத்தனர்.

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் மாவட்ட மக்கள் குறை தீர்வுநாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் சிவன்அருள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, பட்டா மாறுதல், தெருவிளக்கு, கால்வாய், தார்ரோடு, விபத்து ந‌‌ஷ்டஈடு, கல்வி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகள், சான்றிதழ் என 400 -க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. இவற்றின் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

வாணியம்பாடி தாலுகா மேல்குப்பம் ஊராட்சி பொதுமக்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்திற்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

அதில் திருப்பத்தூர் மாவட்டம், மேல் குப்பம் ஊராட்சியை ஆலங்காயம் ஒன்றியத்தில் இருந்து பிரித்து மாதனூர் ஒன்றியத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். எங்கள் ஆட்சேபனையை தெரிவித்து கடந்த 12-ந் தேதி கலெக்டர், திருப்பத்தூர் மற்றும் வேலூர் உதவி கலெக்டர்கள் மற்றும் வாணியம்பாடி தாசில்தார், ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் மனு அளித்தோம்.

15-ந் தேதி மேல்குப்பம் ஊராட்சி பொதுமக்கள் ஒன்றிணைந்து தொடர் உண்ணாவிரதம் தொடங்கினோம். தாசில்தார், காவல் துறையினர் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றோம். ஆனால் இதுவரை எங்கள் கோரிக்கைபற்றிய எந்த ஒரு அறிவிப்பும் அரசின் மூலமாக வெளியிடப்படவில்லை. ஆலங்காயத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மேல்குப்பம் ஊராட்சியை, 45 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மாதனூர் ஒன்றியத்தில் இணைத்திருப்பதால் உடனடியாக மீண்டும் மேல்குப்பம் ஊராட்சியை ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் இணைக்க வேண்டும் என்று கூறிஉள்ளனர்.

தோக்கியம் கிராமத்தை சேர்ந்த முனியம்மாள் என்பவர் தனது மகன் தமிழரசன் (வயது 30) மலேசியாவில் கூலி வேலைக்கு சென்ற போது அங்கு பாஸ்போர்ட் தொலைந்துவிட்டதால் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாகவும், அவரை மீட்டுத்தர வேண்டும் என்றும் கோரிக்கை மனு கொடுத்தார்.

முன்னதாக மாற்றுத்திறனாளிகள் அமர்ந்திருந்த இடத்திற்கே சென்று அவர்களிடம், கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

கூட்டத்தில் பேசிய கலெக்டர் சிவன்அருள், மாவட்ட நிர்வாகம் சார்பில் வருகிற 22-ந் தேதி வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும், அதனை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர் உடனிருந்தார்.

Next Story