சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
திருப்பத்தூரில் வங்கிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்களில் சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூரில் உள்ள கச்சேரிதெரு, கிருஷ்ணகிரி மெயின் ரோடு, வாணியம்பாடி மெயின் ரோடு, வட அக்ரஹாரம் தெரு என பல்வேறு இடங்களில் அரசு மற்றும் தனியார் வங்கிகள் செயல்பட்டு வருகிறது. வணிக நிறுவனங்களும் உள்ளன. இந்த வங்கிகளுக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பணம் செலுத்த, எடுக்க என பல்வேறு பணிகளுக்காக வருகிறார்கள்.
அப்போது அவர்கள் கொண்டு வரும் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களை வங்கிகளுக்கு முன்பாக ஆங்காங்கே சாலையில் நிறுத்தி விடுகின்றனர். கச்சேரி தெருவில் அதிக அளவில் மருத்துவமனை உள்ளது. வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தப்படுவதால் மருத்துவமனைக்கு பொதுமக்கள் செல்ல முடிவதில்லை. மெயின் ரோட்டில் வங்கி மற்றும் வணிக நிறுவனங்கள் முன்பு நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
வங்கிகள் மற்றும் வணிக நிறுவனங்களில் வாகன நிறுத்தங்கள் இல்லாததால் அங்கு வருபவர்கள் வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக ஆங்காங்கே நிறுத்தி விடுகிறார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
எனவே நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் திருப்பத்தூர் வங்கி மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ள தெருக்களில் கிருஷ்ணகிரி மற்றும் வாணியம்பாடி மெயின் ரோட்டில் காலியாக இருக்கும் இடத்தை தேர்வு செய்து அங்கு பணியாளர்களை நியமித்து இரண்டு சக்கர வாகன நிறுத்தம் ஏற்படுத்தி, அங்கு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கலாம். இதனால் சாலை மற்றும் தெருக்களில் போக்குவரத்து பாதிப்பு இருக்காது. நகராட்சிக்கும் வருமானம் கிடைக்கும்.
எனவே உடனடியாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story