வார்டு மறுவரையறை குறித்து பொதுமக்கள் மனு அளிக்கலாம்; கலெக்டர் தகவல்
வார்டு மறுவரையறை குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை மனுவாக அளிக்கலாம் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் கூறினார்.
வேலூர்,
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் வார்டு வரையறை தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மாலதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி) புருஷோத்தமன், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி பேசியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற பகுதி வார்டுகளில் 1,200 வாக்காளர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதேபோன்று நகர்புற வார்டுகளுக்கு 1,600 வாக்காளர்களுக்கு அதிகமானோர் இருத்தல் அவசியம். வருகிற 20-ந் தேதி அந்தந்த பகுதிகளில் வாக்காளர் பட்டியல், வார்டு வரையறை விபரங்களை அரசு அலுவலர்கள் வெளியிட்டு விளம்பரப்படுத்த வேண்டும்.
22-ந் தேதி முதல் வார்டு மறுவரையறை தொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துகளை மனுவாக அளிக்க காலஅவகாசம் அளிக்கப்படும். அதன்பின்னர் 25-ந் தேதி பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை வழங்க வேண்டும்.
அதைத்தொடர்ந்து வார்டு வரையறை தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும். தேர்தல் தொடர்பான பணிகளை அதிகாரிகள் காலம் தாழ்த்தாமல், குறிப்பிட்ட நேரத்தில் விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, உதவி கமிஷனர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story