வெந்நீரில் தவறி விழுந்த சிறுமி உடல் வெந்து பலி


வெந்நீரில் தவறி விழுந்த சிறுமி உடல் வெந்து பலி
x
தினத்தந்தி 18 Feb 2020 3:45 AM IST (Updated: 17 Feb 2020 10:58 PM IST)
t-max-icont-min-icon

பாத்திரத்தில் வைத்திருந்த வெந்நீரில் 4 வயது சிறுமி தவறி விழுந்ததில், உடல் வெந்து பரிதாபமாக இறந்தாள்.

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே திருக்கண்டலம் தலையாரி தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவர், தனது மகள் குப்பம்மாள் என்பவரை சென்னை குத்தம்பாக்கமத்தை சேர்ந்த கஜேந்திரன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.

கஜேந்திரன்-குப்பம்மாள் தம்பதியருக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண்குழந்தையும் உண்டு. இதில், நித்தியஸ்ரீ (வயது 4) கடைசி குழந்தையாகும்.

குப்பம்மாள் தனது மகள் நித்தியஸ்ரீயுடன் பெரியபாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தார். வீட்டில் தனது மகளை வெந்நீரில் குளிக்க வைப்பதை குப்பம்மாள் வழக்கமாக வைத்துள்ளார்.

தவறி விழுந்தாள்

நேற்றுமுன்தினம் வழக்கம்போல வெந்நீர் போட்டு சிறுமியை குளிக்க வைக்க நினைத்தார். இதற்காக சிறுமியை குளியலறையில் அமர வைத்து விட்டு, அடுப்பில் இருந்த வெந்நீரை எடுத்து வந்து, குளியல் அறையில் இருந்த பெரிய பாத்திரத்தில் ஊற்றிவிட்டு மீண்டும் அடுப்பை அணைக்க சமயலறைக்கு சென்றுள்ளார்.

அப்போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு திடுக்கிட்ட குப்பம்மாள் ஓடிவந்து பார்த்தபோது, சூடாக ஊற்றி வைத்திருந்த வெந்நீரில் சிறுமி தவறி விழுந்து உயிருக்கு போராடியதைகண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பரிதாபமாக இறந்தாள்

பதறிப்போன குப்பம்மாள், பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய தனது மகளை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.

இதுபற்றி பெரியபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story